பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

581


உள்ள நான்கும் சிவஞானத்தைப் பெறுதற்கு விரும்பியவர் தம்மை உள்ளும் புறம்பும் துய்மையுடையவராக்கிக் கொள்ளுதற்குரிய சாதனங்களை உணர்த்துவன. இடையிலுள்ள ஐந்தாந்தந்திரம் சமயங்களின் முடிந்த முடிபாகிய சைவ சித்தாந்த உண்மைகளை விரித்துரைப்பது. ஆறு முதல் ஒன்பது முடியப் பின்னுள்ள நான்கு தந்திரங்களும் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாயுள்ள நற்பயன்களை விரித்துக் கூறுவன.

இந்நூலின் முதலாந் தந்திரம், ஞானம் பெற முயல்வோர் அதற்குரியவாறு தம்மைத் தூய நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி அதற்கு வேண்டிய சாதனங்கள் இவையென அறிவுறுத்துவதாகும். இஃது இருபத்துநான்கு அதிகாரங் களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இதன் தொடக்கத்திலுள்ள முப்பது திருப்பாடல்களும் உபதேசம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. இதனையடுத்து யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்பன உலகியல் வாழ்க்கை யனுபவங்களை எடுத்துக்காட்டி வற்புறுத்தப் பெற்றுள்ளன. அடுத்து உயிர் நிலையாமை யென்ற தலைப்பில் பத்துப் பாடல்கள் உள்ளன. உயிர்கட்கு என்றும் அழிவில்லையென்பது சைவ சித்தாந்தக் கொள்கை என்பதனை யாவரும் அறிவர். அங்ங்னமாகவும் இங்கு உயிர்நிலையாமையென்றது மன்னுயிர் தான் தங்கியுள்ள ஒருடம்பிலேயே என்றும் விரும்பி நிலைபெற்றிருக்க மாட்டாத தன்மையது என்பதனைக் கூறுவதாகும். வீயாது, உடம்பொடு நின்றவுயிரும் இல்லை (புறம். 363) எனவரும் புறப்பாடல் தொடர் ஒருடம்பிலேயே நிலைத்திருக்க மாட்டாத தன்மையினை வற்புறுத்தல் காண்க. உயிர் நிலையாமையை யடுத்துக் கொல்லாமை, புலால்மறுத்தல், பிறன்மனை நயவாமை, மகளிர்இழிவு, நல்குரவு என்னும் அதிகாரங்களில் அமைந்த பாடல்கள் முறைப்படுத்தப் பெற்றுள்ளன. இவை தமிழ் மறையாகிய திருக்குறளில் அதிகாரத் தலைப்பினையும் அறப்பொருட் பகுதிகளையும் அடியொற்றியமைந்திருத்தல் காணலாம்.

இவற்றையெடுத்து, அக்கினிகாரியம், அந்தன.