பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


னாதலால் இத்தந்திரத்திற் கூறப்படும் மந்திரச் சக்கரங்களிற் பெரும்பாலன இறைவன் திருவருளாகிய சத்தி பேதங்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன.

உலகியல் வாழ்விலும் மறுமையிலும் உலக மக்கள் விரும்பிய பயன்களை அளிக்க்வல்ல மந்திரங்கள் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது,

“கோவலன் நாவிற் கூறிய மந்திரம்

பாய்கலைப்பாவை மந்திரமாதலின்”

• (சிலப். காடுகாண்.196-7)

எனவும்,

“அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை மரபின் மந்திர மிரண்டும் ஒருமுறையாக வுளங்கொண்டோதி”

(சிலப். காடுகாண். 128-130) . எனவும்.

"ஆறெழுத்தடங்கிய அருமறைக்கேள்வி

நாவியல் மருங்கின் நவிலப்பாடி’ (திருமுருகு.)

எனவும் வரும் தொடர்களால் இனிது விளங்கும், இக்குறிப்புக் களைக் கூர்ந்து நோக்குங்கால் இத்தகைய தெய்வ மந்திரங்கள் பல உபதேச முறையில் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது இனிது புலனாகும். ஆகவே திருமூலநாயனாரால் திருமந்திரத்திற் குறிக்கப் பெற்றுள்ள மந்திரங்கள் பலவும் தென்றமிழ் நாட்டில் மக்களிடையே உபதேச முறையிற் பயிலப்பெற்று வழங்கிய தொன்மையுடையன என்பது நன்கு துணியப்படும். திருமந்திரமாலையினை அருளிய திருமூலர் ஆரியமும் செந்தமிழும் கற்று வல்ல சிவயோகியாராதலின் இமயம் முதல் குமரி வரையுள்ள நிலப்பகுதியாகிய பரத கண்டத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பயன்படும் முறையில் தமிழும் ஆரியமும் ஆகிய இருமொழி யெழுத்துக்களும் விரவிய நிலையில் அகரமுதல் கூடிகர மீறாகிய ஐம்பத்தோ ரெழுத்துக்களால் ஆகிய மந்திரங்களை இந்நூலில் வகுத்துக் கூறியுள்ளார்.