பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வுருவினை மேற் கொண்டு குருவாகி எளிவந்து நற்பொருளை உபதேசித் தருளப் பொருள்களின் உண்மையினை உள்ளவாறு காணுதலாகும். உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்திய சிவபெருமானே புறத்தே ஆசிரியத் திருமேனிதாங்கிக் குருவாய் வந்து அருள்புரிவன் எனத் தெளிவிக்கும் முறையில் அமைந்தது,

"பத்திபதித்துப்பரவும் அடிநல்கிச்

சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே" (1573)

எனவரும் திருமந்திரமாகும். “(அருச்சனை வயலுள்) அன்பாகிய விதையை விதைத்து யாவரும் பரவிப் போற்றும் திருவடியை அடியேனுக்கு நல்கித் தனது தூய மெய்யுணர்வு உபதேசத்தால் எனது மலமாயா கன்மங்களாகிய குற்றங்கள் கெட்டொழிய (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் அறுவகை நெறிகளையும்) சோதித்துப் போக்கிச் சத்தாகிய இறையியல்பினையும் அசத்தாகிய பாசத்தின் இயல்பினையும் (சத்தியைச் சார்ந்தவழிச் சத்தாகியும், அசத்தினைச் சார்ந்தவழி அசத்தாகியும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைமை பற்றிச்) சதசத்து எனப்படும் ஆன்மாவின் இயல்பினையும் உள்ளவாறு புலப்படுத்திக் காட்டுதலால் அகத்தே உயிர்க்குயிராய்ச் சிந்தையில் எழுந்தருளியுள்ள சிவபரம்பொருளே, புறத்தேயும் குருவாக எழுந்தருளி வந்தது” என்பது இதன் பொருளாகும்.

பத்தி - அன்பு, பதித்தல் - விதைத்தல், பரவும் அடி நல்குதலாவது, யாவரும் போற்றிப் பரவும் திருவருளாகிய திருவடி மாணாக்கரது சிந்தையிலும் சென்னியிலும் பொருந்திப் பதியும்படி ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளித் தீக்கை புரிதல், சிந்தையினும் என்றன் சிரத்தினிலும் சேரும் வகை, வந்தவனை என்பது திருக்களிற்றுப்படியார். சுத்த உரையாவது, மலமாயா கன்மங்களைக் கழுவும் ஞான நன்னீராகிய உபதேசமொழி. துரிசு - குற்றம். சோதித்தலாவது உயிர்கள் அறிந்தும்