பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல்பதியும் இருளிடையும் மிகத்தெளிவாய் மிகநன்றாய்த் தோன்றும், நெடிதுகமழ் மணம்ஏதோ பொருள்மொழிந்து நெஞ்சொடு உறவாடும். எவ்விடத்தோ மனைவாயில் திறந்தபடி இருக்கின்றது எனினும் இருள்நடுவில் செம்மலர்கள் விசும்பினிடை உயிர்க்கின்ற மூச்சோ, எவ்விடமும் போய்ப்பரவி நிலமனைத்தும் இடைவெளியே இன்றி இனிதுகமழ் நறுமணமாம் செல்வத்தை யாவர்க்கும் வழங்கும்.

ஒட்டகத்தின் சுமை

வாழ்க்கை, சிக்கலும் முடிச்சும் இன்றி வகைபட நூற்றஓர் நூலன்றே. வானில் இனிய பொறையுடன் ஏறும் வண்ணக் கனவின் உலாஅன்றே. வாழ்வின் அகற்சிஓர் ஒட்டகம் தாங்கும் திமில்மேல் சுமையை நிகர்த்ததுவே. வகுத்திரு பக்கமும் நிறைத்தே இறுக்கமாய் வாங்கிப் பிணித்த வகையதுவே.

வாழ்க்கைப் பெரும்புதிர் காலந் தோறும் வல்லார் மனத்தையும் மருட்டிடுமே! வாகாய் ஒட்டகம் இவர்வோய், என்றன் வாய்மொழி சிறிது கேட்டிடுவாய்: வாழ்ந்தநாள் எல்லாம் ஒருபக்க மாக வரிந்து கட்டி இருக்குதடா! வரும்எதிர் காலமோ மற்றொரு பக்கம் வன்மை முடிச்சாய்த் தொடங்குதடா!

65