பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 259

கொண்ட மாதிரி இருக்கிறார்கள். இத்தனை ஜனங்கள் கூடித் தவிக்கிறார்கள். பங்களா அல்லோல கல்லோலப்படுகிறது. சீனிவாச முதலியார் கடிதம் எழுதியதன் மேல் பெண் அவருடைய வீட்டுக்கு வந்து போயிருந்தால், அதை அவர் சாதாரணமாக ஒப்புக்கொண்டிருப்பாரேயன்றி அதை மறைக்க வேண்டிய பிரமேயமே இல்லையே! ஆகையால் பெண் சொல்வதும் தப்பு. அம்மாளைப்போல பெண்ணுக்கும் புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருப்பதாகவே நாம் கருதவேண்டும்” எனறாா.

உடனே மாதவராய முதலியார், “சீனிவாச முதலியார் ஒப்புக் கொள்ளாமல் மறுத்ததனாலேயே, பெண் அவருடைய வீட்டுக்கு வரவில்லையென்று சொல்லிவிட முடியுமா? அவரே கடிதம் எழுதி இருக்கலாம். பெண் அவருடைய வீட்டுக்குப் போய்விட்டுப் பிறகு அங்கிருந்து வேறு எங்கேயாவது போயிருக்கலாம். அம்மாளுக்கு அந்த விஷயம் தெரியாது. ஆகையால், பெண் வரவில்லையே என்று கேட்டதிலிருந்து, பெண்ணுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்திருந்தால், அந்தப் பழி தம்மை வந்து சாருமோவென்று பயந்து சீனிவாச முதலியார் தமக்கு எதுவுமே தெரியாதென்று அடியோடு எல்லாவற்றையும் மறுத்துவிட முயன்றிருக்கலாம். காரியம் ஏன் அம்மாதிரி நடந்திருக்கக் கூடாது?” என்றார். -

உடனே சீனிவாச முதலியார் கோகிலாம்பாளை நோக்கிக் கோபப் பார்வையாகப் பார்த்து, “என்ன கோகிலா இது? ஏன் இப்படி நீ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறாய்? நான் இன்று காலையில் உங்களுக்குக் கடிதம் எழுதினேனென்று நீ பிரமாணிக்கமாகச் சொல்லுவாயா? நான் எழுதியதாகச் சொல்லும் கடிதத்தைக் காட்டுவாயா? அல்லது நீதான் இன்றைய தினம் காலையில் என் வீட்டுக்கு வந்ததுண்டா? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல். நீ என் வீட்டுக்கு வந்ததாகச் சொல்லுகிறாயே, நீ அங்கே என்னென்ன அடையாளங்களைப் பார்த்தாய்? சொல் பார்க்கல்ாம். வீட்டின் உள்பக்கம் வெளிப் பக்கமெல்லாம் எப்படிக் கட்டப்பட்டிருக் கின்றனவென்று சொல்” என்று கூறினார்.