பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செளந்தர கோகிலம்

அடைந்தவராய்த் தடுமாறிய குரலில் பேசத் தொடங்கி, “ஐயா! இது தெய்வத்தின் சோதனையென்றே நினைக்கிறேன். சுவாமி சாட்சியாகச் சொல்லுகிறேன். நான் பிறந்தது முதல் இதுவரையில் அயலாருடைய பொருளை அபகரித்ததுமில்லை; அபகரிக்க வேண்டுமென்று மனதால் எண்ணியதுமில்லை. வேறு யாரோ சங்கிலியை அறுத்து அதில் ஒரு துண்டை என் சட்டைப் பையில் போட்டுவிட்டு ஒடிப்போயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சங்கிலியின் இன்னொரு பாகமும் போனவகை தெரியவில்லை. யான் திருடியிருந்தால் எல்லாம் என்னிடம் இருக்க வேண்டும். அல்லது மற்றவை ரஸ்தாவிலாவது இருக்க வேண்டுமல்லவா!’ என்றார்.

உடனே சப் இன்ஸ்பெக்டர், ‘உன்னுடன் இன்னும் யாராவது கூட்டாளி வந்திருக்கலாம். மற்ற நகைகளை அவன் எடுத்துக் கொண்டு தப்பி ஒடிப் போயிருக்கலாம். ஆகையால் நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று முடிவாகக் கூறிவிட்டு, சில ஜெவான்களை அழைத்து, திவானுடைய உடம்பை சோதனை செய்து பார்க்கும்படி உத்தரவிட்டார். உடனே ஜெவான்கள் அவர்மீது புலிகள்போலப் பாய்ந்து அவரது அங்க வஸ்திரம் முதலியவற்றை விலக்கினர். அவரது இடுப்பைச் சுற்றி நீளமாய்க் கட்டப்பட்டிருந்த வண்டிக்காரன் பையொன்று காணப்பட்டது. சங்கிலியின் இன்னொரு பாகத்தையும் வைர மோதிரத்தையும் அவர் அதற்குள் வைத்துக் கொண்டிருக்கலா மென்ற நம்பிக்கையுடன் போலீசார் அந்தப் பையை அவிழ்த்து அதற்குள் கத்தையாய்த் திணிக்கப்பட்டிருந்த காகிதச் சுருளை வெளியில் எடுத்துப் போட்டனர். போடவே, அதைக் கண்ட சப் இன்ஸ்பெக்டரும் மற்ற ஜனங்களும் மிகுந்த பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்து மூக்கின் மீது விரலை வைத்தனர். அவ்வாறு வெளியில் எடுக்கப்பட்ட காகிதங்கள் அத்தனையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய் இருக்க, அதைக் கண்ட போலீஸார் தமது கண்களை நம்பாமல் அவை நிஜமான நோட்டு களோ அல்லது அவரால் தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளாய் இருக்குமோவென்று சம்சயித்து, அவைகளை நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தனர். எல்லாம் நிஜமான நோட்டுகளாகவே