பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 77

எந்த இடத்திற்குப் போக வேண்டுமானாலும், இந்த வண்டியில் உட்கார்ந்தே போகலாம். இதோ என் வீடு பக்கத்தில் இருக்கிறது, எனக்கு வண்டி தேவையில்லை. தாங்கள் இதை உபயோகித்துக் கொள்ளலாம்” என்றார். திவான் சாமியார், “இல்லை இல்லை பரவாயில்லை. நான் இதோ பக்கத்தில் இருக்கும் ஒரிடத்துக்கு த்தான் போகவேண்டும். எனக்கு வண்டி அவசியமில்லை. நான் போய் வருகிறேன்” என்று முடிவாகக் கூறியபின் புறப்பட்டார். கந்தசாமி முதலியார் திவான் சாமியாரை நோக்கி நிரம்பவும் மனமுருகி ஆயிரம்தரம் குனிந்து குனிந்து நமஸ்காரம் செய்து கொண்டே பின் தங்க சாமியார் ரஸ்தாவோடு வடக்குத் திக்கில் நடந்து சென்று சிறிது நேரத்தில் முதலியாரது திருஷ்டிக்கு மறைந்து போனார்.

அவ்வாறு பிரிந்துபோன திவான் சாமியார் கால் மைல் தூரம் சென்று தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார். பார்க்கவே, அவருக்குப் பின்னால் சுமார் ஐந்தாறு கஜதுாரத்தில், ஒரு பரதேசி தம்மைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது அவருக்குத் தெரிந்தது; அந்தப் பரதேசியின் சிரம் முழுதும் ஒரே ஜடை மயமாக நிரம்பி இருந்தது. தாடி மீசைகள் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு சிறிய துணி மூட்டை ஒரு திருவோடு ஒரு மூங்கில் குச்சி முதலிய வஸ்துக்கள் அவரிடம் காணப்பட்டன. திவான் சாமியார் திரும்பிப் பின்புறம் பார்த்தவுடனே, புதிய சாமியார் தமது இரண்டு கைகளையும் எடுத்து நிரம்பவும் பயபக்தி விநயத்தோடு கனிந்து திவான் சாமியாரை நோக்கி, ‘சுவாமிகளே! நமஸ்காரம்’ என்று கூறிய வண்ணம் வணங்கினார். திவான் சாமியார் அவருக்குப் பிரதி நமஸ்காரம் செய்த வண்ணம் தயங்கி நிற்க, புதிய சாமியார் அவரண்டை நெருங்கி வந்து, ‘சுவாமிகளே! நான் கச்சேரியிலிருந்து தங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று நிரம்பவும் பணிவாகக் கூறினார்.

திவான் சாமியார் அவரது முகத்தை உற்று நோக்கி, “தாங்கள் யாரென்பது தெரியவில்லையே. தாங்கள் அடியேனைத் தொடர்ந்து வந்த காரணம் என்னவோ?’ என்று பணிவாகக் கூறினார்.