பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர்வரலாறு

161



ராஜா ஜஹாங்கீர் பாதுஷாவின் உதவியையும் பெறுதல் வேண்டும் என்று கூறினார். நிஜாம்ஷா பக்கம் ஷாஜி, அவர் தம்பி சரபோஜி, விட்டோஜியின் மக்கள், மேலும் பல சர்தார்கள் இருந்தமையின், நிஜாம் ஷா அல்லியேதில் ஷாவை மதிக்கவில்லை. ஆகவே அல்லியேதில்ஷா ஜஹாங்கீரின் உதவியுடனும், யாதவராஜாவின் உதவியுடனும் நிஜாம்ஷாவுடன் போர் செய்தார். இந்தப் போரில் ஷாஜி, ஏதில்ஷாவுக்கு உதவியாக வந்த முகலாய சேனையைத் தோற்றோடுமாறு செய்தார். அப்பொழுது அல்லியேதில்ஷாவைச் சேர்ந்த சர்தார் களில் ஒருவர் ஆகிய ஜோஹர்கான் போர்க்கு வந்தார். ஷாஜியின் தம்பி சர போஜி (ஷரீஃப்ஜி) போர் செய்து வீரசுவர்க்கம் அடைந்தார். பிறகு ஷாஜி போர் செய்து வாகைசூடிப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு சேனாபதி அம்பர்கானுடன் நிஜாம்பாதுஷாவிடம் வந்தார். நிஜாம்ஷா, ஷாஜிக்குச் சிறப்புச் செய்தார்.

விட்டோஜியின் மகன் கேலோஜி, ஷாஜிக்குச் சிறப்புச் செய்தவாறு தனக்கும் செய்ய வேண்டுமென்று விரும்பினார். சேனாபதி அம்பர்கானும் பரிந்துரை செய்தார். அங்ஙனமே கேலோஜிக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.

இதனை ஷாஜி கேள்விப்பட்டார்; மனக்கலக்கம் அடைந்தார்: சாதாராவுக்குச் சென்றுவிட்டார்.

இதனையறிந்த அல்லி யேதில்ஷா ஷாஜியைத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்தார். ஷாஜியும் உடன்பட்டார்; பெருஞ்சேனையுடன் நிஜாம் ஷாவின் பேரிலே பாளையமெடுத்தார். நிஜாம்ஷாவின் சேனைகளும் அம்பர்கானும் தோற்றுப்போக, ஷாஜி வெற்றியடைந்தார். ஷாஜிக்கு அல்லி யேதில்ஷா தன்னுடைய ஆட்சியின் கீழ் உள்ளவற்றுள் பாதி சாகீர் கொடுத்தார். பிறகு ஷாஜி முத்தேகான் என்பவனை வென்றார்; மேற்குப் பக்கத்தில் கேரளம் முதலான தேசங்களை வென்று அல்லியேதில்ஷாவுக்குக் கப்பம் கட்டுமாறு செய்தார்.

பின்னர் விஜாபுரத்திலிருக்கையில், ஷாஜிக்கு அவரது இரண்டாவது மனவிை ஜிஜாவின் வயிற்றில் சகம் 1549 (கி.பி. 1627)ல் முதல் மகன் சம்பாஜி பிறந்தார்.

ஏறத்தாழ இந்தச் சமயத்தில் நிஜாம்ஷாவின் சேனைத்தலைவர் அம்பர் கான் இறந்தார். அல்லியேதில்ஷாவின் தந்தை இப்ராஹிம்கானும் இறந்தார்.

ஜிஹாங்கீர் இதையறிந்து, நிஜாம்ஷாவின்பேரிலே படையெடுக்குமாறு தரியாகானைப் படைகளுடன் அனுப்பினார்.

இச்செய்தி நிஜாம்ஷாவுக்குத்தெரிந்தது. "நம்மிடம் ஷாஜியும் இல்லை; யாதவராஜாவுமில்லை; ஆகையால் அவர்களை வருவிக்க வேண்டும்" என்று நினைத்து அவர்களுக்குச் சொல்லியனுப்பினார். இருவரும் தாராகிரிக்கு வந்தனர். அதனருகில் சிவனேரி என்ற கோட்டை: அதற்குரியவர் விசுவாசராவ்: அவருக்கு ஒரு பெண்; செயந்திபாய் என்று பேர்; அப்பெண்ணை ஷாஜியின் மகனாகிய சம்பாஜிக்குக் கொடுத்துத் திருமணம் நடந்தது.