பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தஞ்சை மராட்டிய


யிட்டார். ஆங்கிலேயர் தஞ்சையரசரை உதவியனுப்புமாறு கேட்டனர். அரசரும் திருச்சியினின்று செல்லும் முகம்மது யூசுப்கானுடன் ஒரு படையை அனுப்பி வைத்தார். முசேலாலி தோற்றுப் புதுச்சேரிக்குத் திரும்பினார்.

பிகட்துரை காரைக்கால்மேல் படையெடுத்தபோதும், புதுச்சேரியை முற்றுகையிட்ட போதும், தஞ்சையரசர் ஆங்கிலேயருக்குப் படையுதவி செய்தார்.

பின்னர்த் தஞ்சையரசர் மானோஜிராவைச் சர்க்கீல் பதவியினின்று நீக்கினார்; டபீர் பண்டிதரை அந்த இடத்தில் நியமித்தார்.

முகம்மது அலி திருச்சிக்கு வந்து, பிரதாப சிங்கரைப் பேஷ்கள் பணம் கொடுக்குமாறு கேட்டார். ஆங்கிலேயருடைய உதவியினாலே பேஷ்கள் நிலுவைக்கும், இனிமேல் செலுத்த வேண்டியதற்குமாகத் திட்டம் செய்து, ஆங்கிலேயர் வழியே பேஷ்கள் கொடுப்பது என்று உறுதி செய்யப்பட்டது,

பிரதாப சிங்கரின் மகன் துளஜாவின் இரண்டாவது மனைவி ராஜகுமாராபாயிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சவாயிசாஜிக்கு உதவியாக இருந்த கோயாஜிகாட்டிகே இருக்கிற செய்தியறிந்து, அரசரது ஆணைப்படி அவரைப்பிடித்துக் கொன்று போட்டனர்.

பிரதாப சிங்கர் தமது இறுதிக்காலத்தில் அதிகக் கோபம் கொண்டவராக இருந்தார். இறப்பதற்கு மூன்று மாசத்துக்கு முன் இரவு 12 நாழிகைக்குமேல் வெளியேயிருந்து கேட்டால் கோட்டையில் அழுகைக் குரல் கேட்கும்; கோட்டையிலிருந்து கேட்டால் வெளியே இருந்து அழுகைக் குரல் கேட்கும். இப்படி மூன்று மாதம் நிகழ்ந்தது.

பிரதாப சிங்கர் சகம் 1685-இல் இறந்தார். அவருடன் யமுனபாயி சக்வார்பாயி ஆகிய இரு மனைவியர் உடன்கட்டை ஏறினர்.

துளஜா பட்டத்துக்கு வந்ததும் முகம்மது அலி, முதர்முருகு என்ற 14 பெயருடையதும், கால் ஒட்டகம் போன்றதும், ஒன்றரை ஆள் உயரமுடையதுமான பறவையொன்றை அனுப்பி வைத்தார்.

துளஜா, மதுரையிலே ஆண்ட முகம்மது யூசப்கான் பேரிலும், பெங்களுர்க்கு ஐதர் பேரிலும் படையெடுத்தார். மதுரைக்கு அருணகிரி அப்பாவையும், பெங்களுருக்கு வெங்கடரால் காடேவையும் அனுப்பினார்;

அயிதர் தஞ்சையின் பேரில் வந்தபொழுது துளஜா அயிதருக்கு நான்கு யானையும் ஒரு லக்ஷம் வராகனும் கொடுத்தனுப்பினார்.

உசேன்கான்சூர் என்பவர் மந்திரியாக்கப்பட்டார். இவர் நவாபுக்குச்சேர வேண்டிய பணத்தை ஆங்கிலேயர் வழி செலுத்தாமல் தானே செலுத்தினார்.