பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

203


இச்சுவடியே ஆராச்சிக் குறிப்புக்களுடன் இந்நூலில் அச்சிடப் பெறலாயிற்று. இந்தச் சுவடியின் மொழிநிலை பற்றி இங்குச் சிறிது கூறுவது இன்றியமையாததாகும்.

சுவடியை எழுதியோர் காதால் கேட்டும் பார்த்தும் எழுதுங்கால் தன் அறிவுக்கு ஏற்பச் சொற்களை மாற்றியமைத்திருத்தல் கூடும். காதால் கேட்டு எழுதுங்கால் சந்திப் பிழைகள் ஏற்படுதல் எதிர்பார்க்கக்கூடியதே. ஒரிரு எடுத்துக்காட்டுக்கள்:

"கொஞ்சநாளைக்கு பிற்பாடு; அவருக்கு பிறதம"

இவற்றுள் குவ்வுருபிற்குப் பிறகு வன்மை மிகாமை காணப்படுகின்றது.

“பிற்ப்பாடு" என்பதில் றகரத்தையடுத்துப் பகரமெய் வேண்டாவழிக் காணப் பெறுகிறது.

'பிறதம' என்ற சொல்லில் இடையின ரகரம் இருக்க வேண்டிய இடத்தில் வல்லின றகரம் இருக்கிறது.

றாஜா, உயித்தம், ஆச்சுது போன்ற சொற்கள் இவ்வுருவிலேயே பயின்றுள்ளன.

ஐம்பது என்பது அன்பது என்றும், இரண்டு என்பது ரெண்டு என்றும், ஒன்று என்பது ஒண்ணு என்றும், மூன்று என்பது முனு என்றும் காணப்பெறுகின்றன.

உடம்படுமெய் புணர்த்தல் பெரும்பாலும் தவறாகவேயுள்ளது. இந்த யெட்டு, இருண்டயிடம் என்பன எடுத்துக்காட்டு.

அவர்கள் என்பது அவாள் என்றும், பிராமணர்கள் என்பது பிராமனாள் என்றும் 'அர்கள்' என்பக 'ஆள்' ஆகத் திரிந்தமை பெரும்பான்மை.

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடாது உடம்படுமெய் பெறல் பெரும்பான்மை: கொடுக்கிறதுயென்று; கொண்டுயிருக்கிற என்பன எடுத்துக்காட்டு.

சொல்லடைவு நோக்கின் பிறமொழிச் சொற்கலப்பு அறியப்பெறும்.

மொழி முதலாகா எழுத்துக்கள் இச்சுவடியில் தங்குதடையின்றி மொழி முதல் ஆதல் கண்கூடு:

யிந்த, யெங்கள், யேழு, ராசா, ரெண்டாவது, ரொம்ப, நத்தம். னாகர், னாள், இன்னோரன்ன பல.

சொல்லிப் போட்டு, கொடுத்துப் போட்டு என்ற வட்டாரவழக்கும். அப்படிக்கொத்த இப்படிக்கொத்த என்ற கூற்றுக்களும் பெரும்பான்மை.