பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

சிறுதேர் முதலியன சிறார்க்குச் செய்து கொடுத்தனர். மாதரியின் விருந்தினராய்ச் சென்றவிடத்து, கண்ணகி, தன் கணவன் அமர்ந்துண்ண, ஆயர்மகளிர் அருந் திறனோடு பனங்குருத்தோலையால் செய்த அழகிய பாயினை இட்டாள் எனப் பின்வரும் சிலப்பதிகார அடிகள் சித்தரிக்கும்.

“தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிக..."

இயற்கையோடியைந்த இனிய வாழ்வு பண்டைக் காலத்துத் தமிழக மகளிர் இயற்கையோடியைந்த இனிய வாழ்வு நடத்தினர். சிறுமியர் சிறுவரோடு ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் நீராடியும் நிழலிலிருந்தும் ஆடிப்பாடி மகிழ்வர். சிறுமியர் கரையிலிருந்து ஆரவாரம் செய்து பாராட்டிப் புகழுமாறு சிறுவர் குளக்கரையிலுள்ள உயர்ந்த மரத்தின் உச்சியேறி, நீரில் வீழ்ந்து குளத்தின் அடிவரை பாய்ந்து அடிமண் கொண்டு கரை சேர்ந்து வெற்றிகொண்டாடி மகிழ்வர் எனத் தொடித்தலை விழுந்தண்டினார் (புறம் 243) புறநானூற்றுப் பாட்டொன்றில் எடுத்துக் காட்டுவர். இளம் பருவத்தேயே ஆடவர் வெற்றிகான ஊக்கமூட்டியவர்கள் மகளிர் என்பது இதனால் விளங்குகின்றதன்றோ இன்னும், ஆற்றங்கரை மணலில் பாவை விளையாட்டு, கடற்கரையில் நண்டுகளைப் பிடித்தாட்டும் அலவன் ஆட்டு, மணல் வீடு கட்டல், சிப்பி முதலியவற்றோடு விளையாடல் ஆகியவற்றில் மகளிர் ஈடுபடுவர். பருவ மகளிரும் நல்ல காற்றோட்டமுள்ள பரண்மீதிருந்து பயிர் காத்தனர் என்றும், முழுமதி நன்னாட்களிலும், மாலை நேரத்திலும் ஆடவரும் மகளிருமாகக் கூடி வட்டமாய் நின்றும் கைகோத்தும் குரவைக்