பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47



        'தாலி களைந்தன்று மிலனே'

என்னும் புறப்பாட்டின் அடி உணர்த்தும். சிறுவர், புலிப் பல் தாலியும் அணிந்திருந்தனர். இக்காலத்தில், புலி நகத்தைப்பொற் சங்கிலியில் கோத்து மகளிரும் அணிந்து கொள்ளுகின்றனர். சதங்கை போன்ற காலணிகளைச் சிறுவர் அணிந்திருந்தனர் என்பது 'பொற்கால் புதல்வர்' என்னும் பட்டினப் பாலைச் சொற்றொடரால் விளங்குகின்றது.

அரசரும், வீரரும் வீரத்துக்கு அறிகுறியாகக் காலில் கழலும் தோளில் வாகுவலயம் என்னும் வளையலும் அணிந்து போருக்குச் செல்வர். இவற்றைப் பற்றிய குறிப்பு புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகிறது. பகையரசர்களை வென்ற மன்னர்கள். தோல்வியுற்ற மன்னரது முடியிலுள்ள பொன்னைக் கொண்டு கழல் செய்து, தாம் அவரை வென்று அடிப்படுத்தியதற்கு அடையாளமாக அணிந்து கொள்வர். இவையன்றி, அரசர்கள் பொன்னாலும் மணியாலும் ஆன விலையுயர்ந்த முடிக்கலன், மாலை முதலியவற்றையும் அணிந்திருந்தனர். மேலும், அவர்கள் போருக்குச் செல்கையில், பொன்னால் செய்யப்பட்ட அடையாள மாலைகளை அணிந்து சென்றனர்.

பழங்காலத்தில் பலவகை அணிகலன்கள் இருந்தபோதிலும், இக்காலத்து நாகரிக மகளிரைப் போலவே பழந் தமிழ் மகளிரும், சிறந்த ஒரு சில அணிகளையே அணிந்தனர். அதனால் அன்னார் 'ஆயிழை' எனப்பட்டனர். அவ்வணிகள் முற்றுப்பெற்ற வேலைப்பாடு உடையனவாக இருந்தமையால், முற்றிழை என்னும் பெயர் பெற்றன. பெண்கள் சாதாரணமாக, சங்கு வளையல் பொன்வளையல் போன்றவற்றை அணிந்திருந்தனர்.