பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இருப்பதே அதற்குக் காரணம். உலோகங்களைச் செந்தூர பஸ்மங்களாகச் செய்கிற பழக்கத்தால் செம்பை வெள்ளியாகவோ பொன்னாகவோ செய்யும் இரசவாத வித்தையும் பழைய தமிழ் மருத்துவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அவர்கள் இக்காலம்போல் பெரும்பாலும் பணத்துக்காக மருத்துவம் செய்யாமல், ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்வார்கள். மருத்துவர்கள் பிணியாளர்களைப் பார்க்கும்போது வெறுந் தரையிலிருந்து நோயாளரைத் தொட்டுப் பார்ப்பதால் நிலக்கவர்ச்சியால் மருத்துவனுடைய தேக காந்த சக்தி நோயாளிக்கும் நோயாளியின் தேக காந்த சக்தி மருத்துவனுக்கும் பரவுகிறதென்பதை அறிந்து, தற்காப்புக்காக நோயாளியைப் பார்க்கும்போது வேறொன்றிலும் அமராமல் மரப்பலகை (மனை) மீது அமர்ந்துதான் பார்ப்பார்கள். நோயாளியை வெறுங்கையால் தொட்டுப் பார்க்காமல் தனது கைக்கும் நோயாளி உடம்புக்கும் நடுவில் மெல்லிய பட்டுத்துணியைப் பிரித்துப் போட்டுப் பார்ப்பார்கள். மரப் பலகைக்கும் பட்டுத் துணிக்கும் நிலக் கவர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறதென்பதை நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே கண்டிருந்தார்கள். இன்றும் வயதானவர் பலருக்கும் கிராமங்களில் வாழ்பவர் சிலருக்கும் இது தெரியும். இன்று மின்சாரத்தில் வேலை செய்கிறவர்களிடம் இதைக் காண்கிறோம்.

இவை நிற்க, ஆங்கில ஆட்சிக்குமுன் தமிழ் நாட்டில் பரம்பரையாய்த் தமிழ் மருத்துவக் கலையைத் தந்தையிடத்திலும் குலகுரு முறைப்படியும் அங்கங்கே பலர் கற்றுக் கையாண்டு வந்தார்கள்.