பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

வல்லிக்கண்ணன்


எங்களைப் பலிகொடுத்துக் கொண்டு எதையும் ஸ்தாபிக்க விருப்புமில்லை எங்களுக்கு.

அரவான்கள் கிடைக்காமல் குருக்ஷேத்திரம் நிற்குமானால் போகட்டும்.

இது பற்றி விழிப்போடிருந்தது வாசகன்.

அதன் துவக்கம் நேர்ந்த அந்த மாலையிலேயே இது பற்றி முழுப் பிரக்ஞையுடன் பேசிற்று.

நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டும் தொடர்ந்து அதன் தெளிவான நினைப்புடன் இயங்குகிறது.

எந்த இடத்தையும் அடைய அல்ல. சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாங்கள்.'

வாசகன் முதல் இதழ் 1973 செப்டம்பரில் வெளியாயிற்று. அதன் ஏழாவது இதழ் 1976 ஆகஸ்டில் பிரசுரமாயிற்று.

ஒவ்வொரு இதழிலும் தரமான கவிதைகளையும், வித்தியாசமான சிறுகதைகளையும், கவிதை—கலை சம்பந்தமான சிந்தனைக் கட்டுரைகளையும் வாசகன் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவதில் உற்சாகம் காட்டியது.

அதில் வந்த சில தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. PERVERT பாண்டியனின் A to Z (இது இலக்கிய அக்கப்போர் பகுதி); ‘SORRY FOR THE DISTURBANCE’ ( ஆசிரியர் குறிப்புகள்). சில கவிதைகள், கதைகள் ஆங்கிலத்திலேயே தலைப்பு பெற்றிருந்தன.

எழுத்தாளர்கள்— கவிஞர்கள் சிலர் ஓவியர்களாகவும் முன்னேற முயன்றார்கள். அவர்களது புதுமை ஓவியங்களை சில இதழ்களின் அட்டைச் சித்திரமாக வாசகன் அச்சிட்டு அவர்களது முயற்சியை ஊக்குவித்தது. உதாரணமாக, இரண்டாவது இதழில் பாலகுமாரன் வரைந்த ஓவியம், மூன்றாவது இதழ் அட்டையில் கல்யாண்ஜி ஓவியம்.

தமிழ்க்கவிதைகள் பற்றிய ஞானக்கூத்தன் சிந்தனைகள் : வாசக நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்- தி. க. சிவசங்கரன்; ஸோல்ஸெனிட்ஸின் தோற்றங்கள்— ரேமண்ட் வில்லியம்ஸ் எழுதியதன் தமிழாக்கம் (மாலன்) என் சினிமா, மணி கௌல்— ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பு (வெங்கட்சாமிநாதன் கவிதை—என் நோக்கு கோ. ராஜாராம்—