பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 21 விசும்பும், விசும்புதை வருவளியும், வளித்தலை இய தீயும், தீமுரணிய நீரும், என்றாங்கு ஐம்பெரும்பூதத்து இயற்கைபோல” என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. “புத்தேள் உலகத்து” என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன் ஞாலம், வையம், நிலம், பார், என்னும் சொற்களையே உலகைக் குறிப்பதற்குப் பெரும்பாலும் கூறி வருகிறார்கள். "மலர்தலை உலகின் மல்கிருள் அகல” என்று நன்னூல் தொடங்குகிறது. இங்கு மலர்தலை உலகு என்பது மிகவும் விரிவான பரந்த இந்தப் பேருலகைக் குறிக்கிறது. இதில் உலகம் முழுவதும், அதில் அடங்கியுள்ள பொருள்கள் அனைத்தும் என்று அதன் விரிவான பொருளில் நாம் புரிந்து கொள்ளலாம். உலகம் என்றால் உலக மக்கள் என்று பொருள் கொள்ளலாம், அல்லது வெறும் மக்கள் என்றே கூட புரிந்து கொள்ளலாம். நமது பாராளுமன்ற மக்களவைக்கு லோக் சபா என்று பெயர். லோக் சபா என்றால் மக்களவை என்றுதான் பொருள். ஞாயிறு தோன்றும் போது அதாவது சூரியன் உதிக்கும் போது இந்த உலகில் பரவியுள்ள இருள் அனைத்தும் நீங்கி, உலகின் பொருளனைத்தும் உயிரனைத்தும் தூக்கத்திலிருந்து எழுந்து ஒளிபெற்று உயிர் பெற்றுச் செயல் படத் தொடங்குகின்றன என்னும் கருத்தையும் அச்சொற்களில் காண்கிறோம். இளங்கோவடிகளார் தனது சிலப்பதிகாரக் காப்பியத்தில் மங்கல வாழ்த்துப் பாடல்களில், “அங்கண் உலகு” என்றும், "நாமநீள்வேலி உலகு” என்றும், மண்ணுலகை மட்டுமே குறிப்பிட்டுக் கூறுகிறார் என்றாலும், இவ்வுலகில் உள்ள பொருளனைத்தும் உயிரனைத்தும் இச்சொல்லில் நிறைந்து நிற்கிறது என்பதைக் காண்கிறோம். திங்களின் ஒளியும் மாமழையின் அருளும், ஆட்சியின் கருணையும் உலகைக் காக்கிறது என்னும் பொருள் அச்சொல்லில் நிறைந்திருக்கிறது.