பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


பணியாள் ரவிசேகரன் வணக்கம் செலுத்திவிட்டு முன் வந்தான்: வந்து கையிலிருந்த மருந்தைக் கோப்பையில் கலக்கி நீட்டினான்.

அரசன் அருந்துவதையே பார்த்தான் வேலைக்காரன், தன் தாடியையும் மீசையையும் தடவியவாறே.

“ரவி, இந்தப்படம் எப்பொழுதும் என் கண் பார்வையில் படும்படி சுவரில் அமை. நீ என்னிலும் வயது சென்றவனல்லவா, நீ சொல், என் இளவரசன் எனக்குக் கிடைப்பானா? என் கையாலேயே என் மகனுக்குப் பட்டம் சூட்டுவேனா? பராசக்தி அருள் பாலிப்பாளல்லவா?...” என்று குரல் நடுங்கக் கேட்டார் அரசர்.

"அரசே, என்னை நம்புங்கள். இளவரசர் கட்டாயம் கிடைப்பார். இப்போதே நான் புறப்படுகிறேன் அவரைத் தேடி. நீங்கள் ஓய்வுபெறுங்கள், வேந்தே !..."

***

அன்றைக்கு அமிர்தபுரி ராஜ்யம் கோலாகலமாகத் திகழ்ந்தது. எங்கும் ஒரே ஆனந்தம்!

தேவி பராசக்தியின் ஆலயம் ஜோதிமயமாக விளங்கியது.

மன்னர் மன்னர் குணேந்திரபாலன் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அன்றைக்குத் தான் புன்னகை புரிந்தார். ஆம்: அரசரின் காணாமற்போன மைந்தன் இளவரசர் ராஜேந்திர பாலன்