பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

23

செய்தால், அவை நற்செயலாக இருப்பினும் தீமையாக முடிந்துவிடும்.

        நன்றாற்ற லுள்ளும் தவறு உண்டு அவரவர்
        பண்பு அறிந்து ஆற்றாக் கடை. (469)

7. எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அது வெற்றியாக முடிவதற்கு ஏற்ற வழியையும், முயற்சியையும், அதற்கு வரும் இடையூறுகளையும், அவற்றை விலக்கி முடிக்கும் முறையையும், அதனால் வரும் பயனையும் நன்றாக எண்ணிப் பார்த்தே செய்யவேண்டும்.

        முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
        படுபயனும் பார்த்துச் செயல். (576)

இந்த ஏழு குறள்களாலும் இதுபோன்ற பிற பல குறள்களாலும் மக்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்யும் வழிவகைகளை யெல்லாம் குறள் கூறுகிறது.

செய்ய வேண்டியவைகளைச் செய் என்பது மட்டுமல்ல, செய்யத்தகாதவைகளையும், செய்யக் கூடாதவைகளையும் கூடக் குறிப்பிட்டு, அவற்றைச் செய்யற்க என்றும் குறள் கட்டளையிடுகிறது. அவற்றுள் சில.....

செய்யத் தகாதவை


1. பெற்ற தாயின் வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்கு இழிவு. ஏனெனில், அவன் பத்து மாதம் குடியிருந்த கோயில் அது. ஆகவே அவன் பெரிதும் முயன்று அத் தாயாரின் பசியைப் போக்கவேண்டியது அவனது கடமை. ஆனால் அந்த நிலைமையிலும்