பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரந்து வாழும் வாழ்வு

உலகிற்கு நாகரிகத்தை வழங்கியது தமிழ்நாடு. உலகிற்கு ஒழுக்கத்தைப் போதித்தது தமிழ் மொழி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி வாழ்ந்தவர்கள் தமிழ் மக்கள். இம் மூன்றும் முடிந்த முடிவுகள்.

ஒழுக்கத்தில் தலை சிறந்தவை பொய் கூறாமையும், இரந்துண்ணாமையும் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பதைப் “பொய் கூறு வாய் புழு உண்ணும்” என்ற பழமொழி நன்கு விளக்கிக் காட்டுகிறது.

உண்மையைக் கூறுவதும், ‘உழைத்து உண்பதுமே தமிழ் மக்களின் ஒழுக்கத்தில் தலையாயவை. இவ்வொழுக்கத்தில் தவறியவர்கள் உயிரோடு இருப்பினும் இறந்தோருள் வைத்து எண்ணப்படுவதும், தவறாதவர்கள் இறந்து போயிருப்பினும் வாழ்வோருள் வைத்து எண்ணப்படுவதும் தமிழ் வழக்கு.

ஆசிரியர் திருவள்ளுவர் தமது திருக்குறளில் ‘இரவச்சம்’ என ஒரு தனி அதிகாரத்தையே வகுத்துப் பத்துப் பொன்மணிகளைக் கோத்திருக்கிறார். மனிதன் இரந்து வாழ்வதற்கு அஞ்சவேண்டும் என்பது அவரது கருத்து.

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.

என்பது ஒரு குறள்.

உள்ளத்தே ஒளிவில்லாமல் மகிழ்வோடு கொடை கொடுக்கும் நண்பர்களிடத்தும் இரந்து பொருள் பெறுவதைவிட, இரவாது வறுமையடைதல் கோடிப்பங்கு

திரு-3