பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டலின்

31

வதைவிட, ‘உண்ணவேண்டும்’ என்ற ஆசை கொண்டு உயிர்களைக் கொல்லுவது கொடுமையினுங் கொடுமையாகும் என்பது இக்குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து உண்ணாமை’ என்ற சொற்றொடர் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கொன்று உண்ணும் மக்களைக் கண்டும் வள்ளுவர் வருந்தாமல் “துன்பம் நேரும், பாவம், நரகம் கிடைக்கும்” என்று அச்சுறுத்தியுங் கூறாமல், “கொன்று உண்ணாதிரு! அது நல்லது” என்று மட்டும் கூறியிருப்பது புண்பட்ட நெஞ்சத்தை உண்டாக்க விரும்பாத அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குக் காட்டுகிறது.

“கொல்லத்தான் கூடாது? கொன்றதை உண்ணலாம்” என்ற கொள்கையினரின் வாதத்தை வள்ளுவர் மறுத்து, “கொல்லுவதும் தீது; அதை உண்பதும் தீது” என்ற தமது கருத்தை இக்குறள் மூலம் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.

கொல்லாமையும், உண்ணாமையும் “நல்லது” என்பதோடு இக்குறள் நின்றுவிடவில்லை. இவ்வாறு செய்வதால் பெரும் பலனும் உண்டு என்பதையும் இக்குறள் அறிவிக்கிறது.

“வேள்விகளைச் செய்வதால் விரும்பியவைகளைப் பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. அத்தகைய பெரும்பேறுகளை ஊன் உண்ணாமையாற் பெறமுடியும் என்பது வள்ளுவர் நம்பிக்கை” என்பதை இக்குறளால் அறிய முடிகிறது.

அது எவ் ‘அளவு’ நல்லது? என்பதை அளந்து காட்ட ஒன்று, பத்து, நூறு என உயர்த்திப் பின் ஆயிரம் வேள்விகளைச் செய்து பெறுகின்ற பெரும் பேறுகளை, ‘புலால் உண்ணாமை’ என்ற ஒன்றினால் மட்டும் பெறமுடியும் என, அளவைக் கணக்கில் இக்குறளில் அளந்து காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.