பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தொடங்குதல் முதலியவை நல்லோர் செய்யும் நற்பணிகள். இவை அனைத்தும் புகழுக்குரியவை. எனினும். ஒழுக்கத்தை இழந்துவிட்ட ஒருவன் இவற்றிலொன்றைக் செய்வானானால், அதற்குரிய புகழையும் அவனால் அடையமுடியாது. “செய்த இழிசெயல்களை மறைப்பதற்காகவே அவன் இதைச் செய்கிறான்” என மேலும் அவன் பழிக்கப்படுவான். பாவம்! அவன் அடைய வேண்டாத பழி இது. என் செய்வது? “எய்தாப்பழி” என்பது, நமக்கு இதை மட்டுமா அறிவிக்கிறது? இன்னும் என்னென்னவோ?

மேற்பாதியை மேன் மக்களுக்கும், கீழ்ப்பாதியை கீழ் மக்களுக்கும் அமைப்பதை வள்ளுவர் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. இவ் உண்மை பல்வேறு குறள்களால் நன்கறியலாம். அது மட்டுமல்ல; இந்த அதிகாரத்திலேயே வந்துள்ள “வழுக்கியும் வாயால் சொலல் தீது”, “ஒழுக்கமினான்கண் உயர் வில்லை”, “பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்”, “இழிந்த பிறப்பாய் விடும்”, “என்றும் இடும்பை தரும்” என்ற கீழ்ப்பாதி குறள்களும் இதனை மெய்ப்பிக்கும்.

“எய்தாப்பழி” ஆம், இக்குறளின் இறுதிச் சீர்! இறுதி எச்சரிக்கை! எண்ணாப்பழி, செய்யாப்பழி, பொல்லாப்பழி எனவும் கூறலாம். ஒழுக்கம் தவறி நடக்கும் மக்களுக்கு இதை ஒரு "அபாய அறிவிப்பு” என்றே கூறியாக வேண்டும்.

தம்பி! ஒழுக்கமாக நட! அதனால் பயனுண்டு, புகழுமுண்டு! ஒருக்கால் நீ அறியாது தவறினாலும், உலகம் நம்பாது. ஆதலின் அன்றும் உனக்கு உயர்வுண்டு! ஆகவே முயற்சிசெய்து அதனை அடை! முடியாவிடில் சும்மாவாவது இருந்துவிடு! தவறியும் இழுக்கத்தில்