பக்கம்:திருவருட் பயன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அகரம், தானே தனித்தும் ஏனை உயிருடம்புகளெல்லாம் வேறின்றிப் புணர்ந்தும் நிற்றலாலும், அங்ஙனம் புணர்த்த வழியும் தன்னுருவு தோன்றாதாகலாலும், முதற் கண் வைக்கப்படுதலாலும், விகாரமின்றி நாதமாத்திரையாய் இயல்பாற் பிறத்தலானும் இறைவற்கு உவமையாயிற்று. இவ்வொப்புவமையாற் சடமாகிய ஒலிவடிவன்று என்பதற்கு அறிவாகி என்றும், அகரம்போல ஒருகாற்புணர்ந்து நீங்கா தென்பதற்கு நிறைந்தென்றும், அவ்வகர முதலிய எழுத்துக்களும் உட்படுதற்கு எங்குமென்றும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற்பொருட்டு உவமனொடு புணர்த்தினும் அன்னது அன்றென்பதற்கு நிகரில் என்றும் கூறியருளினார். 'அக்கரங்கள் தோறுஞ் சென்றிடும் அகரம்போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே' என்றருளிச் செய்தவாறு காண்க.

இதனால், இறைவனது உண்மையும், அவன் வேறற நின்றமையும் கூறப்பட்டன.

விளக்கம்:- பதிமுதுநிலை என்னும் இவ்வதிகாரம், இறைவனது அநாதி முறைமையான பழமையின் யுணர்த்துவது. பதி - இறைவன். முதுநிலை - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ச் சொல்லிறந்து நின்ற தொன்மை நிலை இவ்வதிகாரம் திருக்குறட் கடவுள் வாழ்த்தினை அடியொற்றி யமைந்ததாகும்.

இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்வுலகம் ஒர் ஒழுங்கு நிலையில் நின்று செயற்படுதல் இனிது புலனாம். இத்தகைய நியதியொடு பொருந்திய செயற்பாட்டுக்கு நிமித்த காரணமாய் உடனின்று இயக்கி நிற்கும் பேராற்றல் வாய்ந்த முழுமுதற்பொருள் ஒன்று இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/26&oldid=513255" இலிருந்து மீள்விக்கப்பட்டது