பக்கம்:திருவருட் பயன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



53

விளக்கம் : ஆன்மாக்களின் அறிவினை மறைத்து நிற்றல் ஆணவமலத்தின் இயல்பென்பது உணர்த்துகின்றது.

'எவையும் ஏகப்பொருள் ஆகி நிற்கும் பொருள், இருளானது அன்றி இலது’ என மாற்றிப் பொருள் கொள்க. இருளானது-இருள்வடிவாய பொருள்; என்றது, இருள் மலமாகிய ஆணவத்தை. ஏகப்பொருளாகி நிற்றலாவது பலவகைப்பட்ட குணங்களையுடைய எல்லாப்பொருள்களையும் அவற்றின் வேற்றுமை தோன்றாது தான் ஒரு பொருளாகவே மறைத்துக்கொண்டு நிற்றல்.

இனி 'இருளானது என்றது, புறத்தே காணப்படும் பூதஇருளைக் குறித்ததாகக்கொண்டு, பூதஇருளானது சர்வ பதார்த்தங்களையும் தனக்குள்ளே கவளீகரித்துக்கொண்டு இருள் தானாய் நின்றதுபோல, ஆணவமலமானது சர்வான்மாக்களையும் தன்னுள்ளே மறைத்துக்கொண்டு ஆணவமலந் தானாய் நிற்கும்’ எனப்பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர்.

புறத்தே காணப்படும் இருளாகிய பூதஇருள், உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் அகத்திட்டு மறைத்துக் கொண்டு தான் ஒருபொருளேயாய் மறைத்து நின்றாற்போல, அகவிருளாகிய ஆணவமலமும் எல்லாவுயிர்களையுந் தன்னுள்ளே மறைத்துக்கொண்டு எல்லாந்தானேயாய் நிற்கும் தன்மையது என்பதாம். இஃது எடுத்துக்காட்டுவமை.

அகவிருளாகிய ஆணவம் மறைக்குந் திறத்திற் பூத இருளை ஒத்ததுதானோ என வினவிய மாணாக்கர்க்கு அதனின் மிக்கதாதலைப் புலப்படுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

         23. ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும்;
             இருபொருளுங் காட்டா திது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/76&oldid=515054" இலிருந்து மீள்விக்கப்பட்டது