பக்கம்:திருவருட் பயன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



62

உயிர்களைப்பற்றியுள்ள இருள்மலமானது, இடையில் ஒரு காலத்தே வந்து தோன்றியதெனக் கூறுவாயானால், முன்னமே தூயதாயிருந்த ஆன்மாவின்கண்ணே அக் குற்றம் வந்து பொருந்துதற்குக் காரணம் யாது? ஒரு காரணமுமின்றி அது தானே வந்து பொருந்தும் என்பாயாயின், காரணமின்றி வந்து பொருந்தும் அக் குற்றம் உயிர் பாசப்பிணிப்பினின்றும் நீங்கித் தூய்மைநிலைபெற்ற முத்திக்காலத்திலும் வந்து பொருந்துதல் கூடுமன்றோ? அங்ஙனமின்றி ஆணவமலம் முத்திக்காலத்தே தன் வலிகெட்டு அடங்குதலின் அதனை அனாதியென்றலே ஏற்புடையதென்பதாம்.

அங்ஙனமாயின், இருள்மலமாகிய ஆணவம் உயிரை விட்டு என்றும் நீங்குவதில்லையோ! என வினவிய மாணாக்கர்க்கு. அது தன் வலிகெட்டுச் சிதையும் முறையினை உவமையில் வைத்து விளக்குவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

       29. ஒன்று மிகினும் ஒளிகவரா தேலுள்ளம்
           என்றும் அகலா திருள்.

இ-ள் : மல மாயை யென்னும் இாண்டினுள் மலமாகிய இருள், வியாபகம் எல்லாம் மறைத்த தாயினும், ஏகதேச விளக்கமாகிய மாயாகாரியத்தினை உயிர்கள் கவர்ந்த கொள்ளாதாயின், எந்த ஞான்றும் அவ் அவிச்சை அவைகளை விட்டு நீங்குவதில்லை என்க.

கவரும் தன்மை உயிர்களுக்கு உண்டாக வேண்டும் என்பது கருத்து. என்றும் என்பது, அருள் உதயமான காலத்திலும் என்பது காட்டி நின்றது.

இதனால் உயிர்கள் அவிச்சை நீங்கி முத்தியடைவகற்கு ஒர் நிமித்தம் கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/85&oldid=515363" இலிருந்து மீள்விக்கப்பட்டது