பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

'நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையும்

அந்நிலையில் உண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு

மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்

தேவாய் மலகன்மம் தீர்த்தருளிப் - பூவலயம்

தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல

முன்னின்று மும்மலந் தீர்த்தாட்கொள்கை -அன்னவனுக்

காதிகுணம்' என்று ஓதியருளினார்.

இருவினை யொப்பு, மலபரிபாகம்

- நால்வகையாம் சத்திநி பாதம் தருதற்(கு) இருவினையும்

ஒத்துவரும் காலம் உளவாகிப் பெத்த

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்

அலமருதல் கண்ணுற் றருளி' என்பர்,

கந்தர் கலிவெண்பாவில், (கண்ணி 20 22) குமரகுருபரர்.

நால்வகையாம் சத்தி நிபாதம் அடைய இருவினையொப்பு உண்டாக வேண்டும்; அப்பொழுது மலபரிபாகம் ஏற்படும் என்பது கருத்து.

சத்தி நிபாதம்: சத்தி - சிவசக்தி; நி - மிகுதி, பாதம் - பதிதல் மலம் நீங்கிய வழி, சிவசக்தி மிகுதியாக ஆன்மாவிடத்தில் பதிதல்.

இருவினையொப்பு: நல்வினையும் தீவினையும் இருவினைகள் ஆகும். நல்வினை தீவினைகளிலும், அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவங்களிலும், அவற்றின் பயனாகிய இன்ப துன்பங் களிலும் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் இன்றி ஆன்ம அறிவின் கண் ஒப்ப நிகழ்வது, இருவினையொப்பு எனப்படும்.

மலபரிபாகம் ஆவது ஆணவ மலம் ஒடுங்குவது; அதாவது உயிரை அனா தியே பிணித்து நின்ற மலத்தின் மறைப்பு நீங்குதற் கேற்ற பக்குவம், மலபரிபாகம் எனப்படும்.

உயிர்களைப் பிணித்திருக்கும் மும் மலங்களில் ஒன்றாகிய மாயை, உயிர்கட்கு உலக வாழ்வின் அனுபவம் உண்டாதற் பொருட்டு உயிரை மயக்கித் தன் கண் அழுத்திக் கொள்ளும். இம்மாயையின் மயக்கும் செயல் நீக்குவது இறைவன் திருவருள் ஆதல் பற்றி வள்ளலார் மாயையை மிதிக்கும்பதம்’ என்றார் (வரி 66).