பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தால் முற்பட்டது திருவுந்தியார் ஆகும். உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று; விளையாடும் பருவத்து இளமகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றிச் செயல்களை வாயாற் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும். மகளிர் இருவர் சிவபெருமானுடைய வெற்றிச் செயல்களைச் சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் முறையில் திருவாதவூரடிகள் அருளிய திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது, திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருவுந்தியார் என்னும் இச் சித்தாந்த சாத்திரமாகும். இந்நூல் எட்டாந் திருமுறையாகிய “திருவாசகச் செழுமறையின் பிழிவாகத்" தோன்றியதெனத் தெரிகிறது.

“உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா”

எனவும்,

“உய்ய வல்லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்ய வல்லானுக்கே யுந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.”

எனவும் வரும் திருவாசகத்தொடரே இந்நூலாசிரியர் பெயராக அமைந்திருத்தலும், திருவாசகத்திலுள்ள திருவுந்தியார் என்னும் பதிகத்தின் யாப்பு இந்நூலின் யாப்பாக அமைந்திருத்தலும், இந்நூல் திருவாசகத்தின் சொற்பொருள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டிருத்தலும் இந்நூல் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகச் செழுமறையின் வழியில் தோன்றிய ஞான நூல் ஆதலை நன்கு புலப்படுத்துவனவாம். திருப்பெருந்துறையில் திருவாதவூரடிகட்கு இறைவன் குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்து மெய்ப் பொருளை அறிவுறுத்தியது போன்றே திருவியலூரில் உய்ய வந்த தேவ நாயனர் என்னும் பெயருடன் குருவாக எழுந்தருளித் திருவியலூர் ஆளுடைய தேவ நாயனர் என்பவர்க்கு ‘திருவுந்தியார்’ என்னும் ஞான நூலை உபதேசித்தருளி அடிமைகொண்ட திறம் மணிவாசகப் பெருமான் வரலாற்றை நினைவு படுத்துவதாகும்.

மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தைப் போன்றே இத்திருவுந்தியாரிலும் சிவபெருமான் குருவாக எழுந்தருளி ஆன்மாக்


iv