பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


எனவரும் திருமந்திரமாகும். இத்திருமந்திரத்தில் அரனெறி என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு அரனாகிய சிவமும் அவனது அருளாகிய சிவஞானநெறியும் என விரித்துப் பொருள் கொள்ளும் நிலையில் இத் திருமந்திரப் பொருளை யடியொற்றியமைந்தது இத் திருவுந்தியாராகும். வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல என்றது, சிவமும் சத்தியும் பொருளான் ஒன்றேயாகியும் ஞாயிறும் அதன் ஒளியும் போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய் நீக்கமின்றி நிற்றலாகிய தாதான்மிய சம்பந்தமுடைமையினைப் புலப்படுத்தியவாறாம். இச்சம்பந்தத்தை “ஒருமையின் இருமை” எனவும். அத்துவித சம்பந்தத்தை “இருமையின் ஒருமை" எனவும் ஆளுடைய பிள்ளையார் திருவெழுகூற்றிருக்கையிற் புலப்படுத்தியருளினமை இங்கு உளங்கொளத்தகுவதாகும்,

“பிணைபெணொ டொருமையின் இருமையும்
உடையணல்” (1-121-3)

என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச்செயல்.


உ௯. சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால் நாம் என்செய்கோம் உந்தீபற.

இது,குருவின் துணையின்றிச் சிவத்தையுணர முடியாது என்கின்றது.

(இ-ள்) சிவபரம் பொருளையுணர்ந்து கூடுதற்குரிய எல்லை ஆன்ம போதத்தால் உணர்ந்து உரையினால் இன்னதன்மைத்தென்று சொல்லுதற்குரிய இடமன்று: (அம்முதல்வனே குருவாக எழுந்தருளி) உணர்த்தியருள (அவனது அருளே துணையாகச்) சென்று கூடும் இடமாகும் என்று அருளாளர் கூறுதலால் அம்முதல்வனை யடைதற்கு ஆன்மபோதமுடைய நாம் எத்தகைய உபாயத்தை மேற்கொள்ள வல்லேம். எ-று.

அவனருளாலன்றி அவனையுணர்ந்து கூடுதல் ஆன்மாக்களால் ஒரு சிறிதும் இயலாதென்பதாம். -

சொல்லப்புகும் சார்பாகிய சிவமும் அதனைச் சார்ந்து இன்புறும் உயிரும் கூடிய அத்துவித நிலையினைத் திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் 58 முதல் 62 வரையுள்ள வெண்பாக்களால் விரித்துணர்த்துகின்றார்.


58. ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்.