பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனர். இந்நிலையில் திருவுந்தியாரையும், திருக்களிற்றுப்படியாரையும் இணைத்துப் பொருள் காணும் முயற்சி இவ்விருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தே வாழ்ந்த அறிஞர் சிலரால் தொடங்கப் பெற்றது. இம்முயற்சி திருவுந்தியாரில் உள்ள பாடல்களின் பின் அப்பாடல்களை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்கள் இவை என இணைத்துக்காட்டும் அளவில் நின்று விட்டது.

முதல் நூலாகிய திருவுந்தியாரில் உள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு, அவற்றின் பொருளை விளக்கும் முறையில் இயற்றப்பெற்றது திருக்களிற்றுப்படியார் எனத் தெரிதலால், திருவுந் தியாருக்கு உரை காணவிரும்புவோர் திருக்களிற்றுப்படியாரைத் திருவுந்தியாரின் பழைய உரையாகக் கொண்டே உரை காணுதல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக எழுதப் பெறுவதே திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் என்னும் இவ் வுரை விளக்கமாகும். இதன்கண் திருவுந்தியார் பாடலை முதலிற்றந்து உரை வரைந்தும், அதனை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடுத்துத் தந்து உரை வரைந்தும், ஒன்றன் பின் ஒன்றாகத்தொடர்ந்து வரும் பாடற்பொருள்களின் இயல்பு காட்டியும் இச்சாத்திர நூல்களுக்கு மூலமாகிய திருக்குறளையும் திருமுறைத் தொடர்களையும் வேண்டுமிடங்களிற் சான்றாகத் தந்தும், இவ்வாறு உலகப்பொதுமறையாகிய திருக்குறளிலிருந்தும் திருமுறைகளாகிய திருவருளிலக்கியத்திலிருந்தும் சைவசித்தாந்தப் பனுவல்களாகிய மெய்ந்நூல்கள் தோன்றிய வரலாற்று முறைமையினைப் புலப்படுத்திச் செல்வதே இவ்வுரை விளக்கத்தின் நோக்கமாகும்.


உரைத் திறன்


சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் இவ்விரு நூல்களுக்கும் திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த தவச்செல்வர் தில்லச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் சிறந்த முறையில் விரிவுரை இயற்றியுள்ளார்கள். இவ்வாதீனத்தைச் சேர்ந்த தவச்செல்வர் ஒருவர் சுருக்கமும் தெளிவும் பொருந்த எழுதிய பழையவுரையும் இவ்விரு நூல்களுக்கும் உண்டு. இவ்விரண்டு உரைகளையும் கருத்திற் கொண்டு முதல் நூலாகிய திருவுந்தியார்க்கும் அதன் வழிநூலாக அமைந்த திருக்களிற்றுப்படியார்க்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும்


vi