பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

119



(இ-ள்) உடம்போடு கூடிவாழும் சீவன்முத்தர்களாகிய சிவயோகச் செல்வர்கள் தம்மைப் பொருந்தின நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் தமக்குரியவெனக் கருதாது தம்மை அகத்திட்டுக் கொண்ட பேரின்பமயமான சிவனிடத்திலே ஒப்படைத்தலினாலே அவர்கள் விருப்பு வெறுப்புக் காரணமாக வந்தேறும் ஆகாமிய வினையைப் பொருந்தி மேற் சரீரம் எடுத்துப் பிறப்பதுமில்லை. ஆனவ மலந் தீர்ந்தமையால் அழிவது மில்லை. பிறவிச் சூழவிற் சிக்கித் தத்துவச் சேட்டைகளால் இவர்கள் தளர்ச்சியடைதல் சிறிதும் இல்லை எ-று.

எனவே பரமுத்தியெனப்படும் வீடுபேற்றின்பத்தினை இவ்வுலகில் உடம்புடன் கூடி நின்ற நிலையே பெற்று நுகருமியல்பினர் சீவன் முத்தர்கள் என்பதாம்,

முளைத்தல்-பிறத்தல். முடிதல்-அழிதல். இளைத்தல்-இறத்தல் பிறத்தல்களாகிய பிறவிச் சூழவில் அகப்பட்டுத் தளர்தல். ஒன்று என்பது சிறிது என்னும் பொருளில் வந்தது. ஒன்றும் (சிறிதும்) என உம்மை விரித்துரைக்க.

இவ்வாறு அளவிட்டுரைக்கவொண்ணாத பேரின்பமாகிய சிவாநுபவம் கைகூடின காலத்துத் தூய்மை நிலையிலுள்ள இவ்வான்மாவினிடத்து மும்மலச் சார்பாக வேறொன்றும் வந்து கூடாதபடி இன்புருவினான சிவன் தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியொடும் கூடி ஆண்டு கொண்டருளித் தன்னடியார்க்கு ஈறிலாப் பேரின்பத்தினை நல்கியருள்வான் என்பதனை அறிவுறுத்துவது, பின்வருந் திருவுந்தியாராகும்.


௩௪. பேரின்ப மான பிரமக் கிழத்தியோ
டோரின்பத் துள்ளானென் றுந்தீபற
உன்னையே யாண்டானென் றுந்தீபற.

இஃது, இன்புருவாகிய சிவன், தன்னடியார்க்குப் பேரின்பம் அருளுமாறு இதுவெனவுணர்த்துகின்றது.

(இ-ள்) பேரின்பமயமாகிய பிரமப் பொருளாகிய தனக்கு உரிமையுடையளாய சிவசத்தியுடன் கூடி ஒப்பற்ற இன்பநிலையில் உள்ளான் சிவனெனத் தெளிந்துணர்வாயாக. யாவர்க்கும் மேலாம் அம்மையப்பனாகிய அம்முதல்வன் யாவர்க்குங் கீழாம் உன்னையும் தன்னுடைய பேரருளால் ஆண்டு கொண்டு பேரானந்தம் பேராமை வைத்தருளினான் என்று மகிழ்வாயாக எ-று.