பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

133


பெருமக்கள் தாம் உணர்ந்தவாறு “நாதற்கு இடம் அது” என்று உறுதியாக வரையறைப்படுத்து உபதேசிக்க முன் வந்தருளினாலும் அவர்தம் மெய்ம்மொழியினை அமைதியாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்துணரும் பக்குவமுடையார் இவ்வுலகில் மிகவும் அரியராயுள்ளனரே என மக்கட்குலத்தார் உய்தல் வேண்டுமே என்னும் பெருங்கருணைத் திறத்தால் உள்ளம் இரங்கி மாணவனை நோக்கிக் கூறுவதாக இத் திருக்களிற்றுப்படி யார் அமைந்துள்ளது. உண்மைப் பொருள்களை உலகினர்க்கு அறிவுறுத்த வேண்டும் என்பதில் இந்நூலாசிரியராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் கொண்டுள்ள திருவருளார்வத்தை இப்பாடல் இனிது புலப்படுத்துவதாகும்.

82. யாதேனுங் காரணத்தால் எவ்வுலகி லெத்திறமும்
மாதேயும் பாகன் இலச்சினையே-யாதலினால்
பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய்
பேதாபே தஞ்செய்வாய் பின்.

இது, கொள்கைகளால் வேறுபட்ட எல்லாச் சமயங்களாலும் வழிபடப்பெறும் இறைவன், மாதொருபாகனாகிய சிவனேயெனத் தெளிந்து சமய தத்துவ வேறுபாடுகளைக் கருதாமல் இறைவன் ஒருவனேயெனக் கொண்டு வழிபடுதலொன்றே உலகமக்கள் உய்தற்குரிய நன்னெறியாகும் என்று அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) உலகப் பொருள்களில் யாதேனும் ஒன்றை ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டு அதனதன் அமைப்புக்கும் இயக்கத்திற்கும் உரியதனை ஏதுவாகக் கொண்டு நோக்கினாலும் எல்லாவுலகங்களிலும் உள்ள எவ்வகைப் பொருள்களும் சத்தியுடன் கூடிய சிவனுடைய அடையாளமாகவே யமைந்திருத்தலால் (கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருளுண்மையினை யுணரப் பெற்ற நீ) அழிந்து மாறும் இயல்பினதாகிய உலகமும், என்றும் அழியாவியல்பினதாகிய சிவமும் வேறுவேறு பொருள்கள் எனப் பேதமாகக் கொண்டாலும் கொள்க; உலகுயிர்களாய்க் கலந்து இயங்கும் நிலையில் எல்லாம் பிரமமே என அபேதமாகக் கொண்டாலும் கொள்க; அன்றி இவை சொல்லும் பொருளும் போல் ஒருவாற்றால் ஒன்றாதலும் ஒருவாற்றால் வேறு ஆதலுமாகிய பேதாபேதப் பொருள் எனக் கொண்டாலும் கொள்க. (அதுபற்றிக் கவலையில்லை) எ-று.

மேற்கூறிய பேதம், அபேதம், பேதாபேதம், என்னும் மூவகைகளுள் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்து இறைவனை நினைந்து வழிபாடு செய்வாயானால் எல்லாமாம் இறைவன் இம்மூவகையுள்