பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

147


அவனே. உயிர்களின் வினைக்கீடாக அவன் அவள் அது எனப் பகுக்கப்பெற்ற அவ்வுயிர்களேயாய் நிற்பானும் இங்ஙனம் அவையேயாய்க் கூடி நிற்கும்நிலையிலும் இந்த முறைமையெதனையும் அவ்வுயிர்கள் கண்டறியாதவாறு அப்பாற்பட்டு எல்லாவற்றையும் ஒருங்கே கண்டு நிற்பவனும் சிவபெருமானாகிய அம்முதல்வனே யென்றறிவாயாக எ-று

இதன்கண், அவன் என்னும் சுட்டு எல்லாப்பொருள்கட்கும் அப்பாற்பட்டு விளங்கும் சிவன் என்னும் பொருளில் வழங்கப் பெற்றது. இயல்பாகவே பாசங்களின் நீங்குதலால் எல்லாப் பொருள்கட்கும் அப்பாற்பட்ட சிவபெருமானே “அவன்” எனச் சேய்மைச் சுட்டினாலும், பாசப்பிணிப்புற்று இவ்வுலகத்துப் போக்கு வரவு புரியும் இயல்புடைய உயிர்களை “இவன்” என அண்மைச் சுட்டினாலும் சுட்டிக் கூறுதல் சைவ சித்தாந்த நூன் மரபாகும். அவனி-உலகம்; முதல்-காரணம்; ஈண்டு நிமித்த காரணம் என்ற பொருளில் வழங்கப் பெற்றது. ‘அவனி முதலாயினானும் அவனே, அறிவாகி நின்றானும் அவனே, ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் காணாமை கண்டு நின்றானும் அவனே காண்’ என மூன்று தொடர்களாகப் பகுத்துப் பொருள் கொள்க. காணுதல்-அறிதல்: காணாமை - காணவொண்ணாமை.

"அவனே அவனி முதலாயினான்” என்றது, பேரின்பத்திற்குக் காரணன் என்னும் பொருட்டாய்த் தனது முன்னிலைக்கண் உலகங்களை இயக்குவித்தற்குரிய தொடர்பினை உணர்த்தி நின்றது. "அவனே அறிவாய் நின்றான்” என்றது, முற்றுணர்வினன் என்னும் பொருட்டாய் உயிர்கட்கு அறிவித்தற்குரிய தொடர்பினை உணர்த்தி நின்றது. "ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் கண்டு காணாமை நின்றானும் அவனேகாண்” என்றது, தூயதன்மையன் என்னும் பொருளதாய் ஒன்றினுந் தோய்வின்றி நின்ற தொடர்பினை யுணர்த்தி நின்றது. இச்செய்யுள்,

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம்
அப்பொருளுந் தானே யவன். (அற்புதத் திருவந்தாதி-20)


அவனே இருசுடர் தீ யாகாச மாவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து: (௸-21)

எனக் காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருப்பாடல்களை