பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வேருடன் அறுத்துப் போக்கவே சிவபோக விளைவாகிய முத்திப்பழம் ஆன்மாவாகிய கொடியிலே பழுத்துத் தோன்றும். அதன் பயனாகப் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்ட இந்நிலையில் ஆன்மாவும் சிவமும் ஒரு நீர்மையாய்ப் பிரிவறக் கூடியின்புறுதலாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு ஆன்மாவுக்கு வந்து தோன்றும். எ று.

முத்தி முதற்கொடி என்றது, முத்தியாகிய கனி விளைதற்கு முதலாகிய ஆன்மா என்னும் கொடியினை. மோகத்தைக் கொடியாக உருவகஞ் செய்த திருவுந்தியார் ஆசிரியர், அக்கொடியினால் மூடி மறைக்கப்பட்ட ஆன்மாவையும் கொடியாகக் கொண்டு “முத்தி முதல்” எனக் குறிப்புருவகஞ் செய்தார். இக்குறிப்பினை யுணர்ந்த திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் முத்தி முதற்கொடி என அவ்வுருவகத்தை வெளிப்படையாக விரித்துக்கூறினர். அத்தி - அவா, ஆசை. அவா என்னும் பழம் பிறப்பிறப்பாகிய துன்பங்களுக்கு வித்தாதலின் “அப்பழம் உண்ணுதே” என்று அறிவுறுத்தியருளினார்.

“அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து’’ (திருக்குறள்-361)

என்றார் தெய்வப்புலவரும். இத்திருவுந்தியார் இயைபுருவகம் என்னும் அணிநலம் அமைந்ததாகும். “ஆசையாகிய பழம் பழுத்தது” என்ற இத்திருவுந்தியார் தொடரினைத் திருக்களிற்றுப்படியார் ஆசிரியரும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார். “அப்பழம் உண்ணாதே” என முதல் நூலாசிரியர் அறிவுறுத்தினராக, துன்பந் தரும் தன்மையதாய அப்பழம் பழுத்தற்கு இயலாதவாறு மோகக்கொடியினை முதலிலேயே அறுத்தெறிதல் வேண்டும் என்றும் அதனையறுத்தற்குத் திருவருள் ஞானமாகிய கத்தியுளதென்றும் அக்கத்தியினைக்கொண்டு ஆன்மாவை மூடியுள்ள அஞ்ஞானமாகிய கொடியினை வேருடன் அறுத்தொழித்தால் ஆன்மா வென்னும் முதற்கொடியிலே முத்தியாகிய பழம் பழுத்துத்தோன்றுமென்றும் மோகக் கொடியினையறுத்து முத்திக்கனியினைப் பெறுதற்குரிய உபாயத்தினையும் விளங்க அருளிச் செய்துள்ளமை காண்க. இத்திருக்களிற்றுப்படியார் முற்றுருவக அணியமைந்ததாகும்.

பாசவேரறுக்கும் பழம் பொருளாகிய இறைவன் தம்பொருட்டுக் குருவாய் எழுந்தருளி அருளென்னுங் கத்தியினைத் தந்து மோகக் கொடியறுத்து முத்திப் பழம் பெறவுதவிய பெருங்கருணைத் திறத்தை வியத்து போற்றும் முறையில் அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப் படியார் வெண்பாக்களாகும்.