பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

23


‘ஞானவான்கள் போதம் நேயத்திலே பொருந்திய பின்பு பெத்தான்மாக்கள் போதம் போலப் பிரபஞ்சத்திலே சென்றால் தம்மைப்பொருந்தியிருக்கிற மலமாயை கன்மங்கள் நீங்கும்படிக்கு நீக்குவிக்கும்’ என உரைவரைந்தார் பழையவுரையாசிரியர். இங்கு ‘ஒழியின்’ எனவரும் செயினென் வாய்பாட்டு வினையெச்சம் ஒழியாது என்பது தோன்ற நின்றது எனவும், பாசப்பிணிப்பினின்றும் விடுபட்ட சிவஞானிகளது உணர்வு பாசப்பிணிப்புடைய ஏனையோரது உணர்வினைப்போன்று புலன்வழிப்படரும் எளிமையுடையதன்று எனவும் இவ்வுரையாசிரியர்தரும் விளக்கம் உளங்கொளத்தகுவதாகும்.


சு. நஞ்செயலற் றிந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற.

இது, குருவின் அருளால் ஆன்மபோதங்கெட இறைவனது அருளில் அழுந்துமாறு இதுவென உணர்த்துகின்றது.

(இ-ள்) நான் என்னும் முனைப்பினாற் செய்யப்படும் தம்முடைய செயல்கள் அற்று நீங்க இவ்வாறு செயலற்றோம் என்று எண்ணும் ஆன்மபோதமும் அற்றால், நம்முடைய செயல்களெல்லாம் அவன் செயலே நாம் அவனேயென்னும்படி நம்மொடு ஒட்டி வாழ்வான்; யாவராலும் முயன்று பெறுதற்கரிய பேரின்பப் பொருளாகிய தன்னையே நமக்குத் தந்தருளினான் என்று உவகை கொள்வாயாக எ-று.

நம்செய லறுதலாவது, “உலகினில் என்செயலெல்லாம் உன் விதியே, நீயே உள்நின்றுஞ் செய்வித்துச் செய்கின்றாயென்றும் நிலவுவதோர் செயல் எனக்கின் றுன் செயலேயென்றும்” (சித்தியார்-சுபக். 300) இறைவனை நினைந்துபோற்றித் தன் செயலற இறை பணி நிற்றல். எல்லாத்துன்பங்கட்கும் காரணம் செயலுக்குரிய வினை முதல் நாமே எனத் தருக்கி நிற்கும் தன்முனைப்பே யாதலால் இத்தகைய பெருங்குற்றம் நம்மை விட்டகலுமானல் நம் செயலெல்லாவற்றையும் இறைவன் தன் செயலாகவே ஏற்றுக் கொண்டு தானே நாம் என்னும்படி நம்மோடு ஒட்டிவாழ்வான் என்பார், இந்த நாம் அற்றபின் நம்செயல் தன்செயலே, (நாம்) தானே என நிரல்நிறைப்பொருள்படக் கூறினர். ‘தானே’ என்புழித் தேற்றப்பொருளில் வந்த ஏகாரம் ‘தன்செயலே’ என முன்னரும் சென்றியைந்தது. ‘அற்றபின்’ என்றது, அற்றால் என்னும் பொருள்பட வந்த பின்னீற்று வினையெச்சம் இறந்தகாலங் குறித்து நின்றது. ‘தன்னையே தருவான்’ என எதிர் காலத்தாற் கூறற்பாலது விரைவு பற்றி ‘மலர்மிசையேகினான்’ என்றாற் போலத் தன்னையே தந்தான் என இறந்த காலத்தாற் கூறப்பட்டது.