பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

27


பின்பு அவர்கள்பால் அந்தச் சிவபரம்பொருளின் திருவருள் ஞானமும் செயலுமே படிப்படியாக மெல்ல விளையும் என்று காண்பாயாக. எ-று.

தூங்கினர் என்றது, உலகிற் பலவேறு தொழில்களைச் செய்த அயர்ச்சியால் கருவிகரணங்கள் செயலொடுங்கும் நிலையில் உறக்கம் வரப்பெற்றவர்களை. சயனம் - படுக்கை. கவலையின்றி நன்றாக வுறங்குதற்கேற்றவாறு தூய்மையும் மெத்தென்ற மென்மையும் வாய்ந்த படுக்கையென்பது புலப்படத் தூய சயனம் என்றார். விடுதல் - மெல்ல எடுத்துக்கொண்டுபோய்ப் படுக்கையிற் கிடத்துதல். ‘உறங்குக’ எனப் பிறர் தூண்டுதலின்றி அவர்கள் தாமே நன்றாக உறங்கிவிடுவார்கள் என்பார், ‘தாங்களே சட்ட உறங்குவர்கள்’ என்றார். சட்ட என்பது செப்பம் என்ற பொருளிற் வழங்கும் திசைச்சொல். சட்ட உறங்குதலாவது எத்தகைய மனக்கலக்கமும் தோன்றாதபடி இனிய துயில் கொள்ளுதல். அந்த முறைமைபோலச் சரியை கிரியை யோகங்களின் முதிர்ச்சியாலே திருவருட்பதிவு வாய்க்கப் பெற்றவர்கள் மெய்யுணர்வு பெறுதலிலே வேட்கையுடையராய் அருட்குரவனை எங்கே சென்று அடையப் பெறுவோம் என்ற ஆர்வத்துடனே வந்த காலத்து இறைவனாகிய ஞானாசிரியனும் அவர்கள்மீது நிறைந்த அன்பை வைத்து ஞானதீக்கை முறையிலே அவர்களுடைய மலம் மாயை கன்மங்களைப் போக்கி அவர்களது அயர்வு நீங்கத் திருவருளாகிய படுக்கையிலே கிடத்திய அளவிலே அவர்கள் தூய பரம்பொருளொடு ஒன்றித் துயிலுதலாகிய இன்றுயில் பெறுவார்கள். அந்நிலையில் அவர்தம் தற்செயல் கெடுதலால் துயிலும் பொழுது ஆடும் சோதியாகிய சிவன் செயலே அவர்பால் விளங்கித் தோன்றும் என்பதாம்.

இவ்வாறு ஆன்மா தற்சேட்டைகெட இறைவன் திருவருளிலே தோய்ந்து மனக்கவலையின்றிச் சிவபரம்பொருளோடு ஒன்றித் துயிலுதலாகிய இவ்வின்ப நிலையினையே ‘தூங்காது தூங்குதல்’ எனவும், ‘அறிதுயில்’ எனவும் கூறுவர் பெரியோர். இந்நிலையினை யெய்திய பெருமக்களது இயல்பினை விளக்குவதே,

‘ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவார்மற் றேதுண்டு சொல்’ (91)

எனவரும் திருவருட்பயனாகும். அருளொடு ஒன்றியுறங்குதலாகிய இதன் இயல்பினை,

‘சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை’ (6-67-2)

என எதிர்மறைமுகத்தால் அப்பரடிகளும்,