பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

29


‘உள்ளம் உருகின் சிற்பரச் செல்வர் உடனாவர் என்றார், ‘உள்ளம் உருகில் உடனாவர்’ என்னும் இத்தொடர்,

“பண்ணிற்பொலிந்த வீணையர் பதினெண்கணமும் உண்ணா நஞ் சுண்ணப்பொலிந்த மிடற்றினர் உள்ளமுருகில் உடனாவார்”

(2—111–4)

எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்திலிருந்து பொன்னேபோற் போற்றியெடுத்தாளப்பெற்ற சிறப்புடையதாதல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். ‘அல்லது தெள்ள அரியர்’ என்றது, இங்ஙனம் உள்ளம் உருகப் பெற்ற மெய்யடியார்கள் வாயிலாகச் சிவபரம்பொருளைத் தெளிந்துணர்வதல்லது உள்ளம் உருகப் பெறாதாராகிய ஏனையோர். தம்சுட்டறிவினால் ஆராய்ந்தறிதற்கு அரியவர் இறைவர் என்பதாம். “உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்” (6-28-10) என்பது அப்பர் அருண்மொழி. பாசப்பிணிப்புட்பட்டு உணர்வும் செயலும் இழந்த உயிர்த் தொகுதிகளுக்கு எல்லாவற்றையும் இருந்தபடியே அறிந்தும் அறிவித்தும் பேரருள் ஞானமாகிய பெருஞ் செல்வத்தினை வரையாது வழங்கவல்ல ஞானவள்ளலே இறைவர் என்பது புலப்படுத்துவார், ‘சிற்பரச் செல்வர்’ என்றார். சித்பரம் என்னும் சொற்றொடர் தமிழியல்புக்கு ஏற்பச் சிற்பரம் என ஆளப் பெற்றது. ‘சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம்பலம்’ என்பது திருத்தொண்டர் புராணம்.

இத்திருவுந்தியார்க்குரிய உரைவிளக்கமாக அமைந்தது, பின் வரும் திருக்களிற்றுப்படியாராகும்.


14. உள்ள முதலனைத்தும் ஒன்றாய் ஒருவவரின்
உள்ளம் உருகவந் துன்னுடனாம் - தெள்ளி
உணருமவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லா பொருள்.

இது யானென தென்னும் செருக்கற்ற உயிரின்கண் சிவம் விளங்கித் தோன்றுமாறு இதுவென உணர்த்துகின்றது. -

(இ-ள்) மாணவனே (நிலமுதல் நாதமீறாக) உள்ள தத்துவங்கள் அனைத்தும் ஒருங்கே நின்னைவிட்டு நீங்குமாறு (நின்பால்) திருவருள் ஞானம் வந்து பதியுமானால் (அந்த ஞானத்தின் சேர்க்கையினாலே) நின்னுடைய உள்ளம் (தீயிற்பட்ட மெழுகுபோன்று) உருகும் வண்ணம் (மெய்ப்பொருளாகிய சிவம்) நின்பால் எளிவந்து நின்னைத் தானாக்கிக்கொண்டு உடனாய் நிற்கும். இவ்வாறன்றிச் சிவனைத் தற்போதத்தால் ஆராய்ந்தறிய முற்படுவோர் தாம் என்னும் முனைப்பு சிறிதும் குலையாத நிலையில் உள்ளாராக அத்தகையோர் எக்காலத்தும் தன்னைவந்து கூடுதற்கு முயல அந்நிலையிற் சிவபரம்பொருள் அவர்முன் நில்லாது அகலும். எ-று.