பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

31


நில்லா என்றாகியது, செய்யுள்விகாரம். ‘என்றும்புணருவான் இல்லாப் பொருள்’ எனப்பாடங்கொண்டார் பழையவுரையாசிரியர். என்றும் புணருவான் என்றது, எந்நிலையினும் மன்னுயிர்களை விட்டு நீங்காமல் உயிர்க்குயிராய் நிற்கின்ற முதல்வனை. தன்னைத் தற்போதத்தாற் காணமுயல்வார்க்கு அம்முதல்வன் இல்லாதபொருள் போல மறைந்து நிற்பான் என்பார் ‘இல்லாப்பொருள்’ என்றார்.

இறைவனருள் பெற்ற பெரியோர்கள் இறைவனை அன்புசெய்து உள்ளம் உருகப்பெறுதற்குரிய படிநிலைகளாகச் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளை வகுத்துள்ளார்கள். அவற்றுட் சரியை என்பது, சிவாகமங்களில் விதித்தவாறு திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருமேனியை வழிபடும் முறையில் திருக்கோயிலில் திருவலகிடுதல் மெழுகல் பூக்கொய்து மலர்மாலை தொடுத்தல் முதலாக உடம்பின் பணிகளாக நிகழ்வது. கிரியை என்பது சிவலிங்கமாகிய அருவுருவத் திருமேனியைப் புறத்தேயும் அகத்தேயும் பூசனைபுரிதலாகும். யோகம் என்பது பொறி புலன்களையடக்கி மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை அருவ நிலையில் அகத்தே வைத்து வழிபடுதல். ஞானமாவது உருவம் அருவுருவம் அருவம் எனும் முத்திறத்தினும் அடங்காது ஞானமே திருமேனியாக வுடையான் இறைவன் எனத்தெளிந்து ஞானத்திரளாய் நின்ற இறைவனது பொருள்சேர் புகழ்த் திறங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல் ஆகிய அறிவுத்தொழிலால் வழிபடுதலாகும். இந்நால்வகை நெறிகளில் சரியை கிரியை என்னும் இரண்டினையும் சிவதன்மம் என ஒன்றாக அடக்கிச் சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என மூன்றாகக்கொண்டு இவற்றை மேற் கொள்ளும் உபாயங்களையும் இவற்றாற் பெறுதற்குரிய பேறுகளையும் திருக்களிற்றுப்படியார் பாடல்கள் பின்வருமாறு விரித்துக்கூறுகின்றன.


15. நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய-வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்.

இது தற்போதங்கெட இறைவன்பால் அன்புசெய்தற்குரிய நெறிகள் மூன்றென்பதும் இந்நெறிகளில் ஒழுகினர்க்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதும் உணர்த்துகின்றது.

(இ - ள்) நன்மையை விளைக்கும் சிவதன்மத்தாலும் நலந்தரும் சிவயோகத்தாலும் நன்மையைப்பெருக்கும் சிவஞானத்தாலும் நான்