பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

39


எனத் தன் உடல் பொருள் ஆவியனைத்தையும் இறைவனது உடைமையாக ஒப்புவித்து இறைவனது அருளாணையின் வழியடங்கி நின்று செயல் புரிதல். பரம்-பாரம், சுமை. கெடுதல் - நீங்குதல், 'ஐயா என்றது இந்நூலாசிரியர் தம் மாணவனை நோக்கிக் கூறுமுறையில் அமைந்த விளியாகும். உழவு - உழுதற்றொழில். தனிசு - கடன் (நாலடியார்-297) ஒருமுகமேயாதலாவது ஒருவர் இடமாக அமைதல் என்றது உழவன் தான் செய்யும் பயிர்த்தொழிலும் அதற்கு உதவியாகப் பெறும் கடனும் ஒருவரது பொறுப்பில் அமைதல்; இங்ஙனம் உழவும் கடனும் ஒரிடத்தேயமையுமானால் பருவமழையின்மை பெருவெள்ளம் முதலியன காரணமாக விளைவு குறையநேர்ந்தாலும் அதனுல் வரும் இழப்பு அவ்வுழவனைச் சாராது; செய்த தொழிலுக்கேற்ற ஊதியத்தை அவன் பெறுதல் உறுதி என்பதுணர்த்துவார் ‘உழவுந்தனிசும் ஒருமுகமேயானால் இழவுண்டோ’ என வினவினார். இழவு-இழத்தல், நட்டம். இழவுண்டோ என்புழி ஒகாரம் எதிர்மறை. இழப்பு எதுவும் இல்லை என்பதாம். “ஒருவனுக்கு உழவு ஒரிடத்திலும் தனிசு (கடன்) ஓரிடத்திலும் ஆனால் ஒன்றுக்கு ஒன்று உதவி கூடாது. அவையிரண்டும் ஓரிடத்திலேயானால் இவன் சூரனாய்விடுகை சந்தேகமில்லை; அதுபோலச் செய்கின்ற செயல்களில் அசிதம் (பிறர்க்கு இன்னா) வாராமற் சிவனைநோக்கியே செய்தும், இந்தச் செயல்களும் சிவன் செயலென்றே கொண்டு தம்மையும் அவன் கையிலே கொடுத்துப் பரம் (சுமை) கெட்டு விடுகையாலே இவன் பெறுகின்ற முத்திக்கும் இழவுண்டாகுமோ? இதனே விசாரித்துச் சொல்லாய்” எனத் தில்லைச் சிவப்பிரகாசர் தரும் உரைவிளக்கம் இங்கு உளங்கொளத் தகுவதாகும்.

“உழவுந் தனிசும் ஒரிடத்திலே” என வழங்கும் பழமொழி இத் திருக்களிற்றுப்படியாரில் இடம்பெற்றுள்ளமை காண்க.

“இதனுள், ஆன்மபோதமிறந்த அறுபத்துமூவர் முதலான பெரியோர்களைப் பொதுப்படக் கூறி வல்வினைக்கு விரிவு சொன்னது கண்டு கொள்க’’ என்பது பழையவுரையாசிரியர் தரும் பொருட் குறிப்பாகும்.


அ. ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று
மீதானத் தேசெல்க வுந்தீபற
விமலற் கிடமதென் றுந்தீபற.

இஃது ஆன்மா தற்போதங்கெடச் சிவபரம்பொருளோடு ஒரு நீர்மையாகக் கூடிநிற்றற்குரியதோர் உபாயம் உணர்த்துகின்றது.