பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

43


(இ-ள்) ஆறு ஆதாரங்களிலே தெய்வத் திருவுருவினைத் தியானிக்கும் பொழுது அவ்விடத்திலே உள்ளதாகத் தோன்றியும், தியானம் இடையீடுபட்ட காலத்து இல்லையாகியும், தியானத்தில் உண்டாய பொழுதும் அறிவினால் ஆராய்ந்து பார்க்குமிடத்துச் சார்பிற்றோன்றாது மறையும் என்றுணர்வாயாக. அப்பரம்பொருள் நம்முடைய தியான பாவனைக்கு எட்டாத பொருளென்றுணர் வாயாக எறு.

பார்க்கின் - ஆராய்ந்து பார்த்தால், பரமது அன்று-மேற்குறித்த ஆதாரங்களாகிய சார்பினால் தோன்றுவதன்று. பரம் - சார்பு; ‘இத்தனையும் எம்பரமோ’, என்புழி இச்சொல் சார்பென்னும் பொருளிற் பயின்றுள்ளமை காணலாம். இத்திருவுந்தியாரை யடியொற்றியது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.


23. ஆக்கி யொருபொருளை யாதாரத் தப்பொருளை
நோக்கி யணுவி லணுநெகிழப் - பார்க்கில்
இவனாகை தானெழிந்திட் டேகமாம் ஏகத்
தவனாகை யாதார மாம்.

இது, முன்னே கூறப்பட்ட ஆதாரயோகத்தைப் பருமைநிலையில் (தூல நிலையில்) வைத்து விளக்குகின்றது.

(இ-ள்) உடம்பின் அகத்தே வகுத்துரைக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலே ஒப்பற்ற பரம்பொருளை ஆசிரியன் பணித்த திருவுருவத்திலே தன்மனம் புறத்தே செல்லாதவாறு கற்பித்துக் கொண்டு, அப்படிக் கற்பித்துக்கொண்ட திருவுருவம் மனத்திற்பதியும்படி நெடுநாள் தியானித்து அத்தியானம் கைகூடிய அளவில் அவ்வாதாரங்களை விட்டு அப்பொருள் தன்னுயிரிலே பிரிவின்றி யமர்ந்ததாகத் தியானிக்கின், அந்தத் தியானத்தின் முதிர்ச்சியாலே தியானித்தோம் என்ற தற்போதங்கெட்டு ஏகமாகிய அப்பரம்பொருளொன்றுமே இவன்பால் மிக்குத் தோன்றும். இவ்வாறு தியானிப்பானும் தியானிக்கப்படு பொருளும் என்னும் உயிருணர்வு கெட ஏகமாகிய அப்பரம்பொருளேயாய்க் கூடியொன்றுதல் ஆதாரயோகமாம் எ-று,

ஆதாரத்து ஒருபொருளை ஆக்கி அப்பொருளை நோக்கி அணுநெகிழ அணுவிற் பார்க்கின் இவன் ஆகை தான் ஒழிந்திட்டு ஏகம் ஆம், ஏகத்து அவன் ஆகை ஆதாரமாம் என இரு தொடராக இயைத்துப் பொருள் கொள்க. ஒருபொருள்-ஒப்பற்ற பரம்பொருள். ஆக்குதல்-ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் திருவுருவுடையதாகக் கற்பித்துக் கொள்ளுதல். நோக்குதல் - மனம் புறப்பொருளிற் செல்லாமல்