பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்பியார்

55


சத்தி வெளிப்பட்டு ஞானம் வழங்குமாறு மாணவனை அருட்கண்ணால் நோக்கித் தீக்கை புரிதல். எழுப்பி-எழுப்ப; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்து நின்றது. உடந்தையுடனே நிற்றலாவது, திருவருளின் வழியடங்கி அத்திருவருளே கண்ணாக அதனுடன்கூடி மெய்ப்பொருளை நோக்கி நிற்றல்.

இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


30. உணராதே யாவும் உறங்காதே உன்னிப்
புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய
காலங்கள் செல்லாத காலத் துடனிருத்தி
காலங்கள் மூன்றனையுங் கண்டு.

இது திருவருளோடு உடந்தையாய் நிற்குமாறிதுவென வுணர்த்துகின்றது.

(இ-ள்) ஆன்மாவாகிய நீ பொருளல்லவென்று அறிந்து நீங்கின உடல் கருவி யுலகு நுகர்பொருள்களிலே வாதனை மிகுதியால் மீண்டும் கூடாதே; இந்த விகற்பங்கள் நீங்கின நிலையிலே மயக்கங்களில் அழுந்தாதே; இன்புருவாகிய பரம்பொருளை நினது அறிவினால் அறிந்துகூடுதற்கு எண்ணாதே இக்குற்றங்கள் நீங்கும்படி உனக்கு நடுவே நின்ற திருவருளாகிய ஞானத்துடன்கூடி அதுவேயாய் நிற்பாயானால் யாவராலும் உணர்தற்கரிய, காலத்துள் அடங்காததாய் உலகத்தை நடத்தும் காலத்தின் உருவாகவுள்ள சிவத்துடனே நீயும் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களையும் நினக்கு வேறாகக்கண்டு அழிவின்றியிருப்பாய் எ.று.

‘நீ உன்னிப் புணராதே, உறங்காதே, உணராதே பொதுவே நிற்கில், காலங்கள் செல்லாத காலத்துடன் காலங்கள் மூன்றினை யும் கண்டு இருத்தி’ என இயையும். புணர்தல் முன்னர் விட்டொழிந்த உலகவாழ்விலே மீண்டும் கூடுதல். உறங்குதல்-மயக்கங்களில் அழுந்துதல். உணர்தல்-தற்போதத்தால் அறிய முற்படுதல். பொதுவே நிற்றலாவது- திருவருளோடு உடனாய் நிற்றல். திருவுந்தியாரில் ‘உடந்தையுடன் நிற்றல்’ என்றதும் இதுவே. காலங்கள் செல்லாத காலம் என்றது, காலதத்துவத்தினைக் கடந்து நிற்கும் காலகாலனாகிய கடவுளை. எவ்வுயிர்க்கும் பொதுவாய் நின்றுதவுந் திருவருளோடு உடனாய் நிற்பின் அம்முதற்பொருளோடு ஒன்றி மூன்றுகாலங்களையுங் கண்டு அழிவிலாப் பேரின்பத்தினை நுகர்ந்திருப்பாய் என்பார், ‘நீ பொதுவாய் நிற்கில் காலங்கள் செல்லாத காலத்துடன் மூன்றனையுங் கண்டு இருத்தி’ என்றார், இருத்தி - இருப்பாய்.