பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

57


பொருட்டு அத்திருவருளாகிய பற்றினையே உறுதுணையாகப் பற்றி யொழுகுவாயாக” என இத்திருக்குறளுக்கு உய்யவந்த தேவநாயனர் உரை கண்டார் எனக் கருத வேண்டியுளது. எல்லாப் பொருளையும் பற்றி நின்றே அவற்றுடன் சிறிதும் தோய்வின்றியுள்ள இறைவனைப் ‘பற்றற்றான்’ எனக் குறித்தார் திருவள்ளுவர். பற்றற்ருன் என்பதற்குரிய விளக்கமாக அமைந்ததே ‘பாவிக்கில் வாரார்’ என்ற தொடராகும். ‘பற்றற்றான் பற்று’ என்றது, பற்றற்றானாகிய இறைவனுடன் பிரிப்பின்றி நிற்பதாகிய திருவருளை. ‘அப்பற்று’ என்றது, மேலே குறித்த திருவருளாகிய பற்றுக் கோட்டினை.

‘பற்றையறுப்பதோர்’ எனவருந் திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வருந்திருக்களிற்றுப் படியாராகும்.


31. பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற-பற்றதனைப்
பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும்
மற்றுமிது சொன்னேன் மதி.

இஃது, உயிருணர்விற் சிவம் தோன்றுமாறிதுவென வுணர்த்து கின்றது.

(இ-ள்) உயிருக்கு வினைப்பயனை விளைவிக்கும் உடல் கருவி கரணம் நுகர்பொருள் ஆகியவற்றினுள்ளே கொண்டுள்ள ஆசையினை அறவே நீக்குதற்குரிய திருவருளாகிய சிவஞானத்தினை யறிந்து, கூடினோம் என்னும் விருப்புடனிருந்து அறிவதாகிய உயிருணர்வினைக் கைவிடின் அப்பொழுதே மேலாகிய சிவம் தானே சுடர்விட்டொளிரும்; மேலும் இதனை உறுதியாகச் சொன்னேன், இவ்வுயர்ந்தவுண்மையினைச் சிறப்புடையதாக நினது அறிவிற் கொள்வாயாக எ-று.

பற்றினுட்பற்று என்றது, தநுகரணபுவன போகங்களில் உயிருக்கு இயல்பாகவுள்ள ஆசையினை. பற்றினைத் துடைப்பதொரு பற்று என்றது, அவ்வாசையினை யறவே நீக்குதற்குச் சாதனமாகிய திருவருளை. பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்று என்றது, அத் திருவருளைப் பற்றினோம் என்ற விருப்புடன் அறிகின்ற உணர்வாகிய தற்போதத்தினை. பற்று விடுதலாவது, திருவருளே கண்ணாக அறிகின்றோம் யாம் என எண்ணும் உணர்வினையும் அறவே விடுதல்; என்றது, தற்போதமிழத்தலை. அந்நிலையே-அங்ஙனம் தற்போதம் அற்ற அப்பொழுதே. பரம் தானே ஆகும்-[உயிருணர்வு கீழ்ப்பட] சிவம் தானேயாய் மேற்பட்டு விளங்கும். மற்றும்-மேலும். இது-இவ்வுண்மையினை. மதி-மதிப்பாயாக. மதித்தல்-சிறப்புடையதாகக் கருதுதல்.

8