பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இது, சிவாநுபவம் நினைப்பு மறப்புமாகிய இடையீடின்றி நுகர்தற்குரியது என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) கருவிகளோடுகூடி உணர்ந்த காலத்துப் பகலாகிய மாயையும், கருவிகள் ஒடுங்கின காலத்து இருளாகிய ஆணவமும் கூடாமல் ஞானமும் ஆனந்தமுமே ஒளிரத்தக்க இன்பவெளியாகிய பரமாகாசத்திலே சிவனைக் கூடிப்பொருந்தி நின்று நுகர்வாயாக. (மீண்டும் பகல் இரவு என்னும் அறிவு அறியாமையாகிய உலகவாதனை உன்னைப் பற்றாதவாறு) திருவருள்வழி மிகவிரைந்து சிவபரம் பொருளைக் கூடிப் பிரிவின்றி யுணர்வாயாக எ-று.

‘பகல் இரவு இல்லா இன்பவெளி’ என மாறிக்கூட்டுக. பகல் என்றது, மாயா காரியமாகிய கருவிகரணங்களோடு கூடியுணரும் சுட்டறிவு நிலையாகிய சகல நிலையினை. இரவு என்றது, மாயேயமாகிய அக்கருவிகளோடு கூடாது ஒடுங்கிய நிலையில் உயிரைப்பற்றி நிற்கும் ஆணவ இருள் நிலையாகிய கேவல நிலையினை. விரவுதல்- கலந்து ஒன்றாதல். விரைதல் - விரைந்து செய்தல், விரவி விரவி என்னும் அடுக்கு திருவருளை விட்டுச் சிறிதும் பிரியாநிலையினையும், விரைய விரைய என்னும் அடுக்கு அறிவு அறியாமையாகிய நினைப்பும் மறப்பும் மீண்டும் தன்னைப் பற்றுதற்கு இடங்கொடாதவாறு மிக விரைந்து கூடுதலின் இன்றியமையாமையினையும் உணர்த்தி நின்றன.

‘இரவு பகலில்லாஇன்பவெளி’ யென்னும்

இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்குவது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.


36. உண்டெனின் உண்டாகும் இல்லாமை, இல்லையெனின்
உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம்-உண்டில்லை
யென்னும் இவைதவிர்ந்த இன்பத்தை யெய்தும்வகை
உன்னிலவன் உன்னுடனே யாம்.

இது, சிவன் ஆன்ம அறிவினால் அறியப்படும் பொருளுமன்று, எவ்வகையானும் அறியப்படாத இல்பொருளுமன்று என இறைவனது சிறப்பியல்பினை விரித்துரைக்கின்றது. ~

(இ-ள்) கருவிகளைப்பெற்று அறியும் சுட்டறிவினால் அறிந்து கூடுதற்குரிய உள்பொருள் சிவம் எனக்கூறின், அங்ஙனம் சுட்டறிவினால் அறியப்படும் உலகப்பொருளனைத்தும் ஒரு காலத்துத் தோன்றி நின்று பின்னர் அழிந்து மறையும் இயல்பினவாதலால் அங்ஙனம்