பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

81


இங்ஙனம் தற்போதங் கெடாதவர்கள் எதனாலும் நிறைவுபெறாத கருவி கரணங்களாலே பிணிப்புண்டு அவற்றின் பின்சென்று தப்பாமல் ஏவல் செய்து பிறப்பிறப்புக்களிலே உழல்வோராவர். எ-று

செத்தலாவது, தற்போதம் இழத்தல்: தான் என்னும் முனைப்பு நீங்குதல். திருவாசகத்தில் வரும் செத்திலாப்பத்தின் திருப்பாடல்களில் “செத்தல்” இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காணலாம். அதனோடு சேர்ந்து ஒத்தலாவது, சிவத்தோடு ஒன்றியிருந்து அதன் அருளின்வழி ஒத்து அடங்கியொழுகுதல். “ஒத்துச்சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்” என்பர் திருவாதவூரடிகள். யோகபரர், பரயோகர்-மேலான சிவயோகநிலை கைவரப் பெற்றவர்கள். எத்தாலும் - எதனாலும். ஆராமை-விருப்பம் நிரம்பாமை. ஆர்ப்புண்டல்-பிணிக்கப்படுதல். அல்லாதார் என்றது, சிவயோக நிலை கைவரப்பெறாதவர்களை. “அல்லாதார் எத்தாலும் ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு பேராமல் அதன்பின் செல்வர்” என இயைத்துப் பொருள் கொள்க.

இனி, “கரணங்கள் கெட்டார் செத்தாரே; சேர்ந்து அதனோடு ஒத்தாரே யோகபரர் ஆனவர்கள்; எத்தாலும் ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு இங்கு அல்லாதார் பேராமல் அதன்பின் செல்வர்” என இயைத்து,

“கருவிகளை விடுகிறதே முத்தியென்னில் அவர்கள் அநுபவத்தை இழந்தவர்களே; கருவிகளுடனே பொருந்தியிருக்கச் செய்தே அந்த நேயத்திலே பொருந்தியிருக்கிறவர்களே அத்துவிதத்திலே மேம்பட்டவர்; எந்த விதத்தாலும் இவன் வசமாகப் பொருந்தாத கருவிகளினாலே கட்டப்பட்டு நேயத்திலே பொருந்தாதவர்கள், இடைவிடாமற் கருவிகளின் வழியே சென்று செனன மரணத் துக்கப்படுவர்” எனப் பொருள் கூறுதலும் உண்டு. இப்பொருளிற் “செத்தல்” என்பது கருவிகளின் துணையின்றி உயிர் ஒன்றுஞ் செய்ய இயலாது செயலற்ற தன்மையினை. “செத்தான் செயக்கிடந்ததில்” (திருக்குறள்-1001) என்புழி “செத்தல்” என்பது இப்பொருளில் ஆளப்பெற்றுள்ளமை காணலாம். சேர்ந்து அதனோடு ஒத்தலாவது, திருவருளால் திருந்திய கருவிகளுடனே பொருந்தி மெய்ப்பொருளோடு ஒன்றி ஒத்துணர்தல். ஐயுணர்வெய்தியதன் பயனவது மெய்ப்பொருளை உணர்ந்தொன்றுதல் என்பதாம்.

“இதனுள் பெத்தத்துக்கும் முத்திக்கும் கருத்து வேறுபாடு அல்லாமற் கருவியொன்றென்பது கண்டு கொள்க” என இப்பொருட்குக் கருத்துரை வரைவர், பின்வந்த உரையாசிரியர்.

11