பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஒருவழிப்பட்ட அகமார்க்க நெறியினையொட்டிப் புறத்தொழிலாகிய சரீரத் தொண்டினாலேயே அக்காலத்தே மலவாதனையை அறவே மாற்றினார்கள்; ஐயனே இந்த முறைமை சகமார்க்கமாகிய யோக நெறியாலன்று எ-று.

அகமார்க்கமாவது, நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி, நிரந்தரந் திருவாக்கினில் நிகழ்வது அஞ்செழுத்துமேயாக ஐம்புலவுணர்வினை யொடுக்கிச் செம்பொருளாகிய சிவத்தை இடையறாது நினைந்து போற்றுதலாகிய அன்பு நெறியாகும். சகமார்க்கத்தால் அன்று - யோகநெறியால் அன்று. சகமார்க்கம்-தோழமை நெறியாகிய யோகநெறி. தான்-அசை. அகமார்க்கம் அன்பின் வழிப்பட்ட உடம்பினாற் செய்யத்தகும் திருத்தொண்டின் நெறி. சிவனடியார்கள் யோகநிலை கைவரப் பெற்றிருந்தாலும் சரியை கிரியையாகிய திருத்தொண்டு செய்தல் வேண்டும் என்பதாம்.

உ௬. உள்ளும் புறம்பும் நினைப்பறி னின்னுள்ளே
மொள்ளா அமுதாமென் றுந்தீபற
முளையாது பந்தமென் றுந்தீபற.

இது, திருவருட் பதிவினால் இருவினையொப்பும் மலத்தீர்வும் பெற்றுச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்து வழிபடும் அடியார்கட்கு உள்ளத்தே விளையும் பேரானந்தப்பயனை விரித்துரைக்கின்றது.

(இ-ள்) சிவமாகிய பொருள் நெஞ்சத்தின் உள்ளே நுணுகியுள்ளதென்றும் உலகின் புறத்தே விரிந்துள்ளதென்றும் காண்பானாகிய தானென்றும் காணுதற்குரிய பொருளாகிய அவனென்றும் அம் முதற்பொருளைக் கூடவேண்டுமென்றும் கூடினோமென்றும் இவ்வாறு ஆராயும் வேற்றுமையுணர்வு நின்னைவிட்டொழியுமானால், அதன் விளைவாக நின்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத நுகர்ச்சித் தெளிவான சிவானந்தத் தேனாகிய அமுதம் ஊறிப் பெருகி உன்னையே அகத்திட்டுக் கொண்டு தானேயாய்விடும். இதன் பயனாகப் பின்பு பிறப்பிறப்புக்கள் முளைத்தற்கேதுவான பாச விகற்பங்களாகிய பிணிப்பு உண்டாகாது எ-று.

சரியை கிரியை நெறிகளின் நிற்பாரைப் போல ஏகதேசப் படப் புறம்பே தியானிக்குந் தியானமும், யோகநெறி நிற்பாரைப்போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் ஆகிய ஏகதேச நினைவைப் போக்கி, உள்ளும் புறம்புமாகிய எவ்விடத்தும் அம்மெய்ப் பொருளே விரிந்து விளங்குகின்றது” என்னும் பேருணர்வுடன் இறைவனை வழிபட்டால் ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத