பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

6. தில்லைப் பெருங்கோயிலின் நாள் வழிபாடும் திருவிழாக்களும்

தில்லைப் பெருங்கோயில் நாள்தோறும் காலை ஆறு மணிக்குத் திறக்கப்பெறும். பள்ளியறையிலிருந்து இறைவன் திருவடிக்குப் பால் பழம் முதலியன நிவேதனஞ்செய்து, திருவடியைச் சிவிகைமீதமர்த்திச் சிற்றம்பலத்திற்கொண்டு சேர்த்தல் மரபு. விடியற்காலையில் நிகழும் இவ்வழிபாடு பால் நைவேத்தியம் என வழங்கப்படும். இதன் பின்னர், பகலில் மூன்று கால பூசையும் இரவில் மூன்றுகால பூசையும் ஆக ஆறுகால வழிபாடுகள் நடைபெறும். இவ் ஆறுகாலங்களிலும் சந்திரமௌலீசுவரராகிய, படிகலிங்கத்திற்குக் கனகசபையில் அபிடேகம் ஆராதனை நிகழ்ந்த பின்னே கூத்தப் பெருமானுக்கும் சிவகாமியம்மைக்கும் தீபாராதனை நிகழும். காலை ஒன்பது மணிக்குக் காலை சந்தியும் பதினொரு மணியளவில் இரண்டாங் காலமும் பன்னிரண்டு மணியளவில் உச்சிக்கால வழிபாடும் நிகழும். காலை இரண்டாங்கால பூசையில் பத்துமணியளவில் படிகலிங்கத்துக்கு அபிடேகம் செய்த பின்னர் மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதிக்கும் அபிடேகம் செய்து அத்திருவுருவத்தின் முன்னும் பின்னும் கற்பூர ஆரத்திகாட்டுவர். அப்பொழுது மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவைக் கண்டு அன்பர் பலரும் தரிசித்து மகிழவர். உச்சிக்காலம். பகல் பன்னிரண்டுமணியளவில் நிகழும்.

மாலை ஐந்து மணியளவில் திருக்கோயில் கதவு திறக்கப் பெறும். படிகலிங்க அபிடேகம் முடிந்த பின்னர் ஆறு மணிக்குச் சாயரட்சை பூசை நடைபெறும். ஏழுமணியளவில் படிகலிங்க அபிடேகம் ஏழரைமணியளவில் சிதம்பர ரகசிய பூசையும் நடை பெற்ற பின்னர், எட்டு மணிக்கு இரண்டாங்கால பூசை நிகழும். இரவு ஒன்பதரை மணிக்குப் படிகலிங்க அபிடேகம் நிகழ்ந்த பின்னர்ப் பத்துமணிக்கு அர்த்தயாம பூசை நடை பெறும். எல்லாத் திருக்கோயில்களிலும் - எழுந்தருளியுள்ள இறைவனது திருவருட் கலைகள் அனைத்தும் தில்லை மன்றுள் ஆடல் புரியும் அம்பலக் கூத்தன் பால் வந்து ஒடுங்குகின்றன என்பது அப்பரருளிய புக்க திருத் தாண்டகத்