பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

திருக்கோயிலில் தங்கிச் செய்த அழிவுகளாற் சினதந்து போயின என்பது இக்கோயிலில் தளவரிசையில் ஆங்காங்குத் தூண்டு துண்டாகக் காணப்படும் கல்வெட்டுக் கற்களால் உய்த்து உணரப்படும்.

தனியூராகிய இத்தில்லைப் பதியினைச் சூழ்ந்துள்ள பிடாகைகளாகிய இருபத்திரண்டுக்கு மேற்பட்ட சிற்றூர்களும் வழிகளும் முதலாம் இராசராச சோழனுடைய தந்தை சுந்தர சோழர், தாயார் வானவன் மாதேவி, தமக்கை குந்தவையார் சிறிய தந்தை உத்தம சோழன், இராசராசன் முதலியோர் பெயர்களால் சுந்தர சோழவழி, வானவன் மாதேவி வழி குந்தவை வாய்க்கால், உத்தமசோழபுரம், இராசராசன் வாய்க்கால் என்றாங்குக் கல் வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளமையால் முதலாம் இராசராசன் தந்தையார் சுந்தர சோழரும், தாயார் வானவன் மாதேவியும் தமக்கையார் குந்தவையாரும், சிறிய தந்தை உத்தம சோழரும் தம் குலநாயகராகிய ஆடவல்லான் எழுந்தருளிய தில்லைப்பதியிற் பலதிருப்பணிகளைச் செய்துள்ளமை நன்கு புலனாகும்.

தமிழகத்தைக் கி.பி.1012 முதல் 1044வரை ஆட்சிபுரிந்த பெருவேந்தன், முதல் இராசேந்திரனாகிய கங்கை கொண்டசோழன் ஆவான். திருவிசைப்பா ஆசிரியர் கண்டராதித்தர் மனைவியார் செம்பியன் மாதேவியாராலும், தன் தந்தை இராசராச சோழார் தமக்கையார் குந்தவையாராலும், வளர்க்கப் பெற்ற இவ்வேந்தர் பெருமான், தன் வடநாட்டு வெற்றிக்கு அடையாளமாகக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் பெருங்கோயிலைக் கட்டியவனாவான். இத்திருக்கோயிலைத் திருவிசைப்பாப் பதிகத்தாற் பரவிப் போற்றிய கருவூர்த் தேவர், இத்திருப்பதிகத்தின் கடைசிப் பாடலில் இவ்வேந்தனது சிவபத்தியின் மாண்பினைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தனது 24ஆவது ஆட்சியாண்டில் இவனுக்கு அணுக்கப் பணிபுரிந்த நக்கன் பாவையார் என்பவர், தில்லைக் கூத்தனாகிய திருச்சிற்றம்பலமுடைய பெருமான் திருவானித் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளும் அன்றைக்கு வேண்டும் செலவுகட்கும் அமுது படிக்கும் சிவனடியார்களுக்குச் சட்டிச்சோறு ஆயிரம்