பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165



பரவுகார்த் திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவுந்
தில்லைமா னகர்வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே.

சாம்போசி மன்னர் கி.பி. 1684-இல் தில்லைத் திருப்பணியைத் தொடங்கி 1685 இல் சிற்சபைக்குப் பொன் வேய்ந்தார் என்பதும், தில்லையில் சிற்சபையில் எழுந்தருளிய நடராசப் பெருமானுக்கு ஊருடைய முதலியார் என்ற பெயர் வழங்கியது என்பதும் இச்செப்பேட்டால் விளங்குகிறது. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு 14.11.1686 இல் சாம்போசி மன்னரால் அளிக்கப் பெற்றதாகும். முழுவதும்வட மொழியிலெழுதப்பெற்ற இச்செப்பேட்டில் கி.பி. 1684-இலும், கி.பி. 1686-இலும் சிதம்பரத்தில் நிகழ்ந்த குடமுழுக்கு விழாக்கள் இரண்டும் குறிக்கபெற்றுள்ளன. இச்செப்பேடு கூத்தப் பெருமான் திருப்பணியை முன்னிருந்து நடத்தும் சிற்றம்பல முனிவரால் விமானக்கலசத்தில் அலங்கரிக்கப் பெற்றது என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. 1684- இல் செம்பு வேயப் பெற்று, 1686-இல் மீண்டும் குடமுழுக்குச் செய்யப்பெற்றது என்பதும் தில்லைக் கோயிலில் நிகழ்ந்த இத்திருப் பணிகளை மேற்பார்வை செய்தவர் சிற்றம்பல முனிவராகிய துறவி என்பதும் இச் செய்பேட்டினால் இனிது விளங்கும். இக்கும்பாபிஷேகம் இரண்டிலும் சாம்போசியின் குலகுருவான முத்தைய தீட்சதர் என்பவர் முன்னிருந்து நடத்திவைத்தாரென்பது மேற்குறித்த செப்பேடுகளால் புலனாகின்றது.

1684-ஆம் ஆண்டிலும், 1686-ஆம் ஆண்டிலும் நடராசப் பெருமான் எழுந்தருளிய சிற்சபைக்குச் செம்பு வேய்ந்தும், பொன் வேய்ந்தும் இருமுறை கும்பாபிஷேகம் செய்த சாம்போசி என்னும் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் மூத்தமகனாவான். இவன் கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பகுதியை