பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

திருக்கோயிலை நெருங்கியவுடன் தூல இலிங்கமாகிய திருக் கோபுரத்தைக் கண்டு, இரண்டு கைகளையும் தலை மீது குவித்துச் சிவ நாமங்களை உச்சரித்த வண்ணம் உட்புகுந்து பலிபீடத்துக்கு இப்பால் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும் மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும் வடக்கே தலைவைத்து வீழ்ந்துவணங்குதல் வேண்டும்.

தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் கிழக்கே தலைவைத்து வணங்குதல் வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் ஒருபோதும் கால் நீட்டி வணங்குதல் கூடாது.

தலை, இரண்டு கைகள், இரண்டு செவிகள், மோவாய், இரண்டு புயங்கள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வீழ்ந்து வணங்குதல் அட்டாங்க நமஸ்காரம் ஆகும். இஃது ஆடவர்க்கு உரியது.

தலை, இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள் என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்துமாறு வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். இது மகளிர்க்கு உரியது.

நிலமிசை வீழ்ந்து வணங்கியபின் திருக்கோயிலை வலம் வருதல் வேண்டும். அவ்வாறு வலம் வரும் போது கரங்களைக் குவித்து வணங்கியவாறு சிவ நாமங்களை உச்சரித்துக்கொண்டு மெல்ல அடிமேல் அடிவைத்து வலம் வருதல் வேண்டும்.

திருச்கோயிலை மூன்று முறையேனும் ஐந்து முறையேனும், ஏழு முறையேனும், ஒன்பது முறையேனும் வலம் வருதல் நலமாகும்.

முதலில் விநாயகப்பெருமானை வணங்கிய பிறகு சிவலிங்கப் பெருமானையும், உமையவளையும் தரிசனம் செய்து திருநீறு பெற்று அணிந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பிறகு நடராசர், ஆலமர் செல்வர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் குமரப் பெருமான் முதலிய - மூர்த்திகளை வணங்குதல் வேண்டும்.