பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

உருத்திராக்கம்: திரிபுரசங்காரத்தின் பொருட்டு எழுந்தருளிய உருத்திர மூர்த்தியின் கோபக் கண்ணில் உண்டான விதையினின்று முளைத்த மரத்தின் மணியாதலின் உருத்திராக்ஷம் எனப் பெயர் பெற்றது. இதனை அணிவோர் உடற் பிணியும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலக் குற்றங்களும் நீங்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராவர்.

திருவைந்தெழுத்து: குருவின் பால் உபதேசம் பெற்றோர் மீண்டும் தம்மை மும்மலப் பிணிப்பு வருத்தாதவாறு இடைவிடாது எண்ணிப் போற்றுதற்குரியதாய் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய் விளங்குமந்திரம் திருவைந்தெழுத்தாகும்.இது தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம் என மூவகைப்படும்.

'நாதன் நாமம் நமச்சிவாயவே, (சம்பந்தர் 3--49--1)
சிவாயநம என்று நீறணிந்தேன், (அப்பர் 4-94--6}
'மறவாது, சிவாயவென்று எண்ணினார்க்கு' (5-51--6)

என வரும் தேவாரத் தொடர்களில் இம் மூவகைப் பஞ்சாக்கரமும் எடுத்தாளப் பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும்.

நடராசர் அபிடேகம்

மக்களுக்குரிய ஓராண்டு தேவர்க்கு ஒரு நாள். ஒரு நாளைக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஆறு சிறு பொழுதுகளாகப் பகுத்துரைத்தல் போலவே, ஓர் ஆண்டினையும் ஆறுகாலங்களாகப் பகுத்துக்கொண்டு கூடத்தப் பெருமானுக்கு ஆறு அபிடேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழித் திருவாதிரை விடியற்காலம். மாசி வளர்பிறைச் சதுர்த்தசி காலசந்தி. சித்திரைத் திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்தரம் சாயரட்சை, ஆவணி வளர்பிறைச் சதுர்த்தசி இரண்டாங்காலம், புரட்டாசி வளர்பிறைச் சதுர்த்தசி அர்த்த யாமம். நடராசர்க்குரிய ஆறு அபிடேக நாள்களையும்

“சித்திரையில் ஓணமுதல் சீரானி உத்தரமாம்
சத்ததனு வாதிரையின் சார்வாகும் - பத்தி
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசிமன் '
றீசரபி டே கதினமாம்".

என்ற வெண்பாவினால் அறியலாம்.