பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தில்லைச் சிற்றம்பலத்திலே, அருவத் திருமேனியாகிய சிதம்பர ரகசியத்தையும் உருவத் திருமேனியாகிய கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் அருவுருவத்திருமேனியாகிய படிகலிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம். கூத்தப்பெருமான் திருவுருவத்தை அதிகார சிவமாகிய மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகிய சபாபதி எனவும், அம்மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட போக சிவமாகிய சதாசிவமூர்த்தியின் மேலான தத்துவம் கடந்த நிலையில் உள்ள ஆனந்த தாண்டவமூர்த்தி எனவும் ஆகமங்கள் இருதிறனாகக் கூறுகின்றன. மகுடாகமம் கூறும் நடராச வடிவம் தத்துவங்கடந்த ஆனந்தத் தாண்டவ வடிவமாகும். காமிகம் முதலிய ஆகமங்கள் கூறும் நடராசர் சந்நிதி பரிவார சந்நிதி எனவும், மகுடாகமங் கூறும் நடராசர் சந்நிதி மூலத்தானச் சந்நிதி எனவும் பகுத்து ணர்தல் வேண்டும். இச் சிறப்புப்பற்றியே தில்லைப் பெருங்கோயிலின், வழிபாடு மகுடாகமத்தை அடியொற்றியதெனத் தில்லைக் கலம்பக ஆசிரியர் குறித்துள்ளார் எனக்கருத வேண்டியுளது.

தில்லைச்சிற்றம்பலவரை வணங்கி, அவ்வம்பலத்தைச் சூழ்ந்த முதற்பிரகாரத்திலுள்ள கூத்தாடும் விநாயகர் இலிங்கோற்பவர், அறுமுகப்பெருமான் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்திதியையும், பள்ளியறையையும், மேல் மாளிகையையும், அதனை யொட்டியமைந்தமேன்மாடத்திலுள்ள ஆகாயலிங்கத்தையும், கீழே பிச்சைத்தேவர் சந்நிதியையும் பைரவர் சந்நிதியையும் வணங்கி, பரமானந்த கூவத்தின் அருகேயுள்ள சண்டேசுவரர் சந்நிதியை அடையலாம், பைரவர் சந்நிதிக்கு எதிரில் பரமானந்த கூவத்தின் அருகில் அமைந்தது. சண்டேசுவரர் சந்நிதியாகும். இதன்கண் நான்கு முகங்களையுடைய, பிரம சண்டீசுவரரும் ஒருமுகத்தோடுள்ள சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசுவரரும் எழுந்தருளியுள்ளனர். இம்முதற் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியின் குறட்டின் கீழ், திருவிளையாடற் புராணச் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

தில்லையம்பலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமான் சந்நிதியை யடைந்து தென்புறமாக எதிரிலுள்ள படிகளின் - மேலேறி நின்று பார்த்தால் தென் பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பல