பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அவற்றை ஆன்மாக்களுடன் கூட்டுதல். காத்தல் என்பது உடம்போடு உலகில் வாழ்ந்து இருவினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாங்கள் செய்த இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களைத் தாங்களே நுகரும் படிசெய்து அவற்றைப்பற்றியுள்ள பாசப் பிணிப்பினை அகற்றுதலாகும். அழித்தல் என்பது கன்மத்தினால் அலைப்புண்டுவருந்தும் ஆன்மாக்களை இளைப்பாற்றும் பொருட்டு, உலகினை ஒடுக்கிக் கொள்வதாகும். மறைத்தல் என்பது ஆன்மாக்கள் செய்த இருவினைப் பயன் அவ்வான் மாக்களே புசித்துக் கழிக்கும் படி மறைந்து நின்று தகர்த்துக் கன்மங்களைப் போக்கி ஆன்மாக்களைச் செம்பிற் களிம்பு போன்று அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தினை யுண்டாக்குதல். அருளல் என்பது மலப்பிணிப் பினையறவேயகற்றி ஆன்மாக்கனைத்தன் திருவடியிலே கூட்டிக் கொள்ளுதலாகும். இங்குச் சொல்லப்பட்ட ஐந்தொழில்களும் ஒருங்கே நிகழும் வண்ணம் சிவபெருமான் திருவருட் கூத்து ஆடியருளுதலால் அத்திருக்கூத்து பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் எனப்போற்றப்பெறுவதாயிற்று. தில்லையம்பலத்தில் நிகழும் இத்திருக் கூத்து மேற்கூறிய ஐந்து தொழில்களின் அமைப்புடையதாதலை


"அரன்துடி தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம்,
அரனுற்றனைப்பில் அணையுந் திரோதாயி,
அரனடி யென்றும் அனுக்கிரகந் தானே" (திருமந்-2799)

எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் இனிது விளக்கியுள்ளார்.

'கூத்தப்பெருமான் திருக்கரத்தில் உள்ள உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும். அஞ்சல் என்று அமைத்த வலக்கை காத்தற்றொழிலை யுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற்றொழிலையுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற் றொழிலைக் குறிக்கும். ஊன்றியவலத் திருவடியினால் முயலகனை மிதித்துள்ள நிலையில் மறைத்தற் றொழில் பொருந்தியுள்ளது. அம்முதல்வனது இடது பாதமாகிய தூக்கிய திருவடியானது எக்காலத்தும் மன்னுயிர்களுக்கு அருள் புரிதலைக்குறிப்பதாகும்" என்பது மேற்காட்டிய திருமந்திரத்தின் பொருளாகும். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது,