பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் - நூற்பா க

௧௩
'

அவற்றைச் சார்ந்துவரும் அன்ன, ஆங்க, போல, புரைய என்பன முதலாகவுள்ள இடைச் சொற்கள் உவமவுருபு எனப்படும். இவ்வாறு உவமமும் பொருளும் அவற்றிடையே அமைந்த பொதுத்தன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப்படையாக உணர்தற்கேற்ற சொல்லமைப்பினையுடையது ஏனையுவமம் எனப்படும்.

  இஃது உவமத்தின் பாகுபாடு உணர்த்துகின்றது.

(இதன்பொருள்) உவமத்தாற் பொருள்தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்றவாறு.

ஒரு பொருட்கு மற்றொருபொருளை உவமையாகக் கூறுமிடத்து அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரணமாகவும், அத்தொழிலாற் பெறும்பயன் காரணமாகவும், மெய்யாகிய பொருளின் வடிவுகாரணமாகவும், அவ்வடிவின்கண் நிலை பெற்றுத் தோன்றும் நிறமாகிய வண்ணங்காரணமாகவும் ஒப்பித்துரைக்கப் படுமாதலின் உவமத்தாற் பொருள் புலப்படும் புலப்பாட்டுமுறை நால்வகைப்படும் என்றார் ஆசிரியர்.

வினையாற் கிடைப்பது பயனாதலின் வினையின் பின்னர்ப் பயனும், மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின் பின்னர் உருவும் முறையேவைக்கப்பட்டன. வடிவம் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும் உற்றுனரும் பண்பும் எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினை யும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். உருநிறம். மெய்யாகிய வடிவினை இருட்பொழுதிலும் கையினால் தொட்டறிதல் கூடும் வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்து கொள்ளுதல் இயலாது.

'புலியன்ன மறவன்’ என்பது, புலிபாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின் வினையுவமம் எனப்படும். ‘மாரியன்னவண்கை' யென்பது மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் பயனுல் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும், துடியிடை என்பது, மேலும் கீழும் அகன்றபரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கிவடிவொத் தமையின், மெய்யுவமம் எனப்படும். பொன்மேனி என்பது, பொன்னின்கண்ணும் மேனியின் கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் 'உருவுவமம்’ எனப்படும். வினை, பயன், மெய், உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்குமாதலின், உவமப்பகுதி இந்நான்கே என வரையறுத்தார் ஆசிரியர்.